ஹரித்துவார், ஜன.18- முஸ்லிம்களை படுகொலை செய்வோம் என்று பேசிய யதி நரசிங்கானந்த் உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதற்கு பிரச்சாரம் செய்வோம் என்று சாமியார்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் `தரம் சன்சத்’ என்ற பெயரில் இந்துத்துவா அமைப்பினர் மாநாடு நடத்தினர். இதில், கலந்துகொண்ட சாமியார்களும், பாஜக-வினரும் முஸ்லிம்களை படுகொலை செய்வோம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினர். இதுதொடர்பாக நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து, சாமியார்கள் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, பூஜா ஷகுன் பாண்டே, சாகர் சிந்து மகராஜ், தரம்தாஸ், வாசிம் ரிஸ்வீ என்ற ஜிதேந்திர நாராயண் சிங் உள்ளிட்டோர் மீது உத்தரகண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
எனினும் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்குப் பின், அண்மையில் இஸ்லாமில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய வாசிம் ரிஸ்வீ-யை மட்டும் கைது செய்தனர். இதைக் கண்டித்து யதி நரசிங்கானந்த் சரஸ்வதி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில், அவரை வெறுப்புப் பேச்சு வழக்கில் கைது செய்யாமல், முஸ்லிம் பெண்களை இழிவாக பேசிய பிரிவில் மட்டும் உத்தரகண்ட் காவல்துறை கைது செய்தது. இதுதொடர்பாக விவாதங்கள் எழுந்த பின்னணியில், வெறுப்பு பேச்சிற்காகவும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது, பத்திரிகையாளர்களை மிரட்டியதற்காக, கொலை மிரட்டல் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகளிலும் யதி நரசிங்கானந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சாமியார்கள், யதி நரசிங்கானந்தை விடுதலை செய்யக் கோரி, சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஹரித்துவாரில் போராட்டத்தை துவங்கியுள்ளனர். ‘‘தரம்சன்சத்தின் மேடையில் பேசியவர்கள் மீதான வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிரயாக்ராஜின் அலகாபாத்தில் மிகப்பெரிய சாமியார்கள் மாநாட்டைக் கூட்டி, சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக-வை தோற்கடிக்குமாறு மக்களுக்கு அறைகூவல் விடுப்போம்” என்று சாமியார் கிருபா தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.