states

img

உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜகவை முந்தும் காங்கிரஸ்!

டேராடூன், ஜன.20- சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களிலும் வாக்காளர்களின் மனநிலையை கணிக்க ‘ஜீ நியூஸ்’ (ZEE NEWS) ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. ‘ஜந்தா கா மூட்’ (‘Janta Ka Mood’) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஐந்து மாநிலங்களிலும் 10 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதனடிப்படையில், உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக-வை பின்னுக்குத் தள்ளி, காங்கிரஸ் முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது. ‘ஜீ நியூஸ்’ சர்வேயின்படி, காங்கிரஸ் 35 இடங்களிலும், ஆளும் பாஜக 33 இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும், மற்றவர்களுக்கு ஒரு இடத்திலும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மைக்கு 36 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், பாஜக - காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே வாய்ப்பு சமமாக இருப்பதால், ஆட்சியைப் பிடிப்பது யார்? என்பது கடுமையான போட்டியாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உத்தரகண்டின் முதல்வர் வேட்பாளர் குறித்த கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் வேட்பாளரான ஹரீஷ் ராவத்தே அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை 43 சதவிகிதம் மக்கள் ஆதரிக்கின்றனர். பாஜக-வில் முதல்வர் வேட்பாளர்களாக கருதப்படும் புஷ்கர் சிங் தாமியை 31 சதவிகிதமும், அனில் பலூனியை 11 சதவிகிதம் பேரும் ஆதரித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் விஜய் கோத்தியாலுக்கு 7 சதவிகிதம் ஆதரவு கிடைத்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள 70 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 14-அன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 10 அன்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

;