states

img

கோல்கேட் பற்பசையும்... ஜியோ மார்ட்டின் கோரப் பற்களும்...

மகாராஷ்டிராவில் கோல்கேட் பற்பசை வியாபாரிகள், அதைப் புறக்கணிக்கிற எதிர்ப்பை காட்டியுள்ளார்கள். இதனால் பல சிற்றூர், கிராமக் கடைகளில் கால்கேட் பற்பசை கிடைக்க வில்லை.

என்ன பிரச்சனை?

இந்தியாவில் கோல்கேட் போன்ற பெரு நிறுவனங்கள் நுகர்வு பொருள் சந்தையில் 7,00,000 சிற்றூர், கிராமங்களில் 1.30 கோடி கடை களுக்கு தங்கள் சரக்குகளை இடை நிலை விநியோ கிப்பவர்கள் மூலம் கொண்டு செல்கின்றன. இந்த நுகர்வோர் அளிப்பு சங்கிலியை நம்பி வாழ்பவர்கள் 2 கோடி குடும்பங்கள். அதாவது கிட்டத்தட்ட 10 கோடி பேர். கால்கேட் இந்த அளிப்பு சங்கிலியை உடைத்து பி டூ பி (B2B) தொழில் நுட்பக் கம்பெனி களான ரிலையன்சின் ஜியோ மார்ட், ஊடான் போன்றவை வாயிலாக நுகர்வோரை நேரில் சென்றடைய முயற்சிப்பதே பிரச்சினை.  கோல்கேட் நிறுவனம் பாரம்பரிய இடைநிலை விநியோகிப்பவர்களுக்கு 100 கிராம்  பேஸ்ட் ஐ ரூ. 40 க்கு தந்தால் அவர்கள் சிற்றூர், கிராமக் கடைகள் வரை கொண்டு செல்லும்  போது தூரத்தை பொறுத்து ரூ. 45 லிருந்து ரூ .55  வரை அது விற்கப்படும். ஆனால் ஜியோ மார்ட், ஊடான் போன்ற நிறுவனங்கள் ரூ. 35க்கு நுகர்வோருக்கு கொண்டு போய் சேர்த்து விடுகின்றன. நுகர்வோருக்கு இவ்வளவு விலைக் குறைப்பு கிடைக்கிறது எனில் கடைகளுக்கு போவார்களா? இடை நிலை விநியோகிப்பவர் களுக்கும் வேலை இல்லை. 

கழுத்தறுப்பு விலை

இதுதான் பிரச்சனை. இந்த B2B தொழில் நுட்ப  நிறுவனங்கள் வாயிலாக கோல்கேட் விற்பனை செய்யக் கூடாது என்பதே இடை நிலை விநியோகிப்பவர் கோரிக்கை. இதை கோல்கேட்  ஏற்கவில்லை. இதனால்தான் இடை நிலை விநியோகிப்பவர் நடத்தும் புறக்கணிப்பு போராட்டம். இதனால் மகாராஷ்டிராவின் பல ஊர்களின் சின்னக் கடைகளில் கோல்கேட் கிடைப்பதில்லை.  ஒரு கேள்வி எழுகிறது. இடை நிலை விநியோகிப்பவர்களுக்கே ரூ.40 க்கு கொடுத்த கோல்கேட் அதே விலைக்குதானே ஜியோ மார்ட்டுக்கு, ஊடானுக்கு தரும், ஆனால் அந்த  நிறுவனங்கள் எப்படி ரூ 35 க்கு விற்க முடியும்?  செயலிகள் வாயிலாக விற்பது என்றாலும் எப்படி வாங்குகிற விலையைக் காட்டிலும் எப்படி விற்பனை விலை குறைவாக இருக்க முடியும்?  இதுவே கழுத்தறுப்பு விலை (Predatory Pricing) என்பது.  இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் செய்த அதே அனுபவம்தான். இவர்கள் பெரு நிறுவனங்கள் என்பதால் சில ஆண்டுகளுக்கு நட்டத்தை தாங்கு வார்கள். ஊடான் நிறுவனம் 5000 கோடி வரை நட்டத்தை சந்தித்துள்ளது. ஜியோ மார்ட் இதை  விட கூடுதல் நட்டத்தை சந்தித்துள்ளது. நட்டத்தை சந்திக்கிற சில ஆண்டுகளில் இந்த இடை நிலை விநியோகிப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள். அதற்குப் பிறகு சந்தை இவர்கள் கைகளில் முழுவதும் வந்து விடும்.  அப்புறம் இவர்கள் வைப்பதே விலை. அப்போது அந்த சின்னக் கடைக்காரர்களையும் கூட பயன்படுத்திக் கொள்வார்கள். (அவர்களின் லாபத்திலும் கை வைப்பார்கள். ஒரே கல்லில்  மூன்று மாங்காய். இடைநிலை விநியோகிப் பவர்கள், சின்னக் கடைக்காரர்கள், நுகர்வோர் மூன்று பேருக்குமே ஆப்பு. தொகுப்பாளர் குறிப்பு)

இன்னொரு எதிரி

இதில் இன்னொரு எதிரி ஒளிந்திருப்பது தான் கதையில் உள்ள ட்விஸ்ட். இவ்வளவு நட்டங்களை இந்த B2B பெரும் தொழில் நுட்ப நிறுவனங்கள் தாங்க முடிவதற்கு காரணம் அமெரிக்க மலிவுக் கடன் அவர்களுக்கு கிடைப்பதுதான். இந்த அந்நிய நிறுவன “வினை  மூலதனக் கம்பெனிகள்” (Venture Capital Companies) அமெரிக்க பென்சன் சேமிப்புகளை தன் வசம் வைத்திருப்பவை. ஒரு அமெரிக்க பென்சன்தாரர் இந்தியாவின் கழுத்தறுப்பு போட்டிக்கு உதவி நம்ம ஊர் சாதாரண இடை நிலை விநியோகிப்பவர்களின் வாழ்க்கையை “பறிக்கிறார்” என்றால் நம்ப முடிகிறதா? இந்த கடன் அந்த பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். நம்ம ஊர் சாதாரண இடை நிலை  விநியோகிப்பவர்களுக்கு கிடைக்காது. அவர்கள் நமது வங்கியில் போய் கடன் வாங்கு வது என்றால் பிணை தர வேண்டும். தாவு தீர்ந்து விடும்.  இந்த கழுத்தறுப்பு விலைத் தந்திரம் உலகளாவிய உத்தியாக மாறி இருக்கிறது. ஃபேஸ் புக், அமேஜான் போன்ற நிறுவனங்கள்  இப்படி ஆடும் ஆட்டங்கள் பற்றி அமெரிக்கா வின் ஃபெடரல் டிரேட் கமிஷன் புதிய சேர்மன் லினா கான் மிகக் கடுமையாக விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  கோடிக் கணக்கான மக்களின் வாழ்வைப் பறிக்கிற இந்த பெரு நிறுவனங்களின் விளை யாட்டு இந்திய நாட்டின் சமூக அமைதியை சீர் குலைத்து விடும்.

- பிரவீன் சக்ரவர்த்தி 
 தமிழில் சாரம்: க.சுவாமிநாதன்



 

;