போலிக் கட்சிகளை துவங்கி தேர்தல் நன்கொடைகளை அள்ளிச் சுருட்டும் பாஜக?
குஜராத்தில் அறியப்படாத 10 கட்சிகளுக்கு ரூ.4,300 கோடி நன்கொடை
இந்தி நாளிதழ்களில் கடந்த 2 நாட்களாக தலைப்புச் செய்தியாக ஒரு முக்கிய நிகழ்வு வலம் வருகின்றது. அந்த செய்திகளில், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் ஜனநாயக சக்தி, பாரதிய தேசிய ஜனதா தளம், சுதந்திர பேச்சு கட்சி, புதிய இந்தியா ஐக்கிய கட்சி, சத்யவாதி ரக்சத், இந்திய மக்கள் மன்றம், சவுராஷ்டிரா ஜனதா கட்சி, ஜன் மேன் கட்சி, மனித உரிமைகள் தேசிய கட்சி, கரிப் கல்யாண் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் 2019-20 முதல் 2023-24 வரையிலான 5 ஆண்டுகளில் நன்கொடையாளர்களிடமிருந்து ரூ. 4,300 கோடி பெற்றுள்ளன. இந்த கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கட்சிகள் இருப்பது பற்றி யாருக்கும் தெரியாது. குறிப்பாக 2019-20 முதல் 2023-24 வரையிலான 5 ஆண்டுகளில் குஜராத் மாநிலம் 2 மக்களவைத் தேர்தலையும், ஒரு சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டுள்ளது. இந்த 3 தேர்தல்களில் 10 கட்சிகளைச் சேர்த்து மொத்தம் 43 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 54,069 மட்டுமே. மேலும் 10 கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் செலவு அறிக்கையில் செலவிடப்பட்ட தொகையாக ரூ. 39.02 லட்சம் மட்டுமே கணக்கு காட்டியுள்ளன. ஆனால் தணிக்கை அறிக்கையில் ரூ.3,500 கோடி செலவிட்டதாக 10 கட்சிகளும் தெரிவித்துள்ளன. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் திட்டமா? உச்சநீதிமன்றத்தால் தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தங்கள் கட்சி கூடுதல் நன்கொடை பெற்றதை மறைக்கவே குஜராத் மாநிலத்தில் போலிக் கட்சிகளை பாஜக களமிறக்கியதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. மேலும் அக்கட்சிகள் மூலம் நன்கொடை பெற்றும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தும் குஜராத் தேர்தல்களில் பாஜக முறைகேடுகளை அரங்கேற்றியுள்ளதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. இதனிடையே, குஜராத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள யாரும் அறியாத அரசியல் கட்சிகள் ரூ.4,300 கோடி நன்கொடை பெற்றிருப்பது குறித்து நாளிதழில் வெளியான செய்தியைப் பகிர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பணம் எங்கே போனது? மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
குஜராத்தில் அறியப்படாத 10 கட்சிகள் ரூ.4,300 கோடி நன்கொடை சுருட்டி யுள்ளதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”குஜராத் மாநிலத்தில் சில பெயர் தெரியாத கட்சிகள் உள்ளன. அவற்றின் பெயர்களை யாரும் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், அந்த கட்சிகள் ரூ. 4,300 கோடி மதிப்புள்ள நன்கொடைகளைப் பெற்றுள்ளன. இது எப்படி? இந்தக் கட்சிகள் மிகக் குறைந்த தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டுள்ளன. குறை வாகவே செலவிட்டுள்ளன. இந்த ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன? கட்சிகளை யார் நடத்துகிறார்கள்? பணம் எங்கே போனது? தேர்தல் ஆணையம் விசாரிக்குமா? அல்லது இங்கும் பிரமாணப் பத்திரங்களைக் கேட்குமா? அல்லது இந்த முறையும் மறைக்கும் வகையில் சட்டத்தையே மாற்றுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.