states

img

எவ்வளவு குற்றமோ அவ்வளவு மாமூல் வாங்கிய பாஜக! - தேர்தல் பத்திர ஊழல் ஊர்வலம்

உப்புமா கம்பெனிகள்

உப்புமா கம்பெனி என்று கூறுவதைக் கேட்டிருப்போம். ஷெல் கம்பெனி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நிறுவனங்களுக்கான வரையறை எதுவும் இந்திய கம்பெனிகள் சட்டத்தில் இல்லை. “வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுதலோ, குறிப்பிடத்தக்க அளவு சொத்துகளோ இல்லாத நிறுவனங்கள் அவ்வாறு அழைக்கப்படுகின்றன. அவை சில நேரங்களில் வரி ஏய்ப்பு, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் பணச் சலவை, உரிமையாளரை மறைத்தல், பினாமி சொத்துகள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுகின்றன” என்று கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், ஜூன் 2021இல் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருக்கிறார். அப்படியான நிறுவனங்களைக் கண்காணிப்பதற்காக சிறப்பு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்னும் புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால், அதானி நிறுவனம் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை, பல ஆயிரம் கோடி ரூபாய்களை அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்த பல அந்நிய நிறுவனங்களுக்கு, அந்த நாடுகளில் வெறும் பெயர்ப்பலகை மட்டும்தான் இருந்தது என்பதை படங்கள், ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருந்தது அல்லவா, அவைதான் உப்புமா கம்பெனிகள். அதாவது, உற்பத்தியோ, வணிகமோ இல்லை, ஊழியர்கள்கூட இல்லை, ஆனால், ஆயிரங் கோடிக் கணக்கில் பணம் புரளுகிறது என்றால், அது நேர்மையான வழியில் வந்த பணமில்லை என்பது கல்வியறிவே இல்லாதவர்களுக்குக்கூடத் தெரியும். அப்படி ஒருவர் நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கிறார் என்றால், அவரிடம் மாமூல் வாங்காமல் இருக்க முடியுமா? அதைத்தான் பாஜக செய்திருக்கிறது. 

திருடனை கண்டுபிடித்து, தீவிர வழிப்பறி!

உப்புமா கம்பெனிகள் என்று சந்தேகத்துக்குரியவையாக 349 கம்பெனிகளின் பட்டியலை, கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் 2017இல் வெளியிட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, நிறுவனத்தின் செயல்பாட்டிற்குப் பொருந்தாத மிகப்பெரிய தொகைகளை செலுத்தியது, பரிமாற்றம் செய்திருந்தது உட்பட இந்நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்த ‘தீவிர குற்றங்கள் புலனாய்வு அலுவலகம்’ அளித்த தகவல்களின்படி, இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு, பங்குச் சந்தையை நிர்வகிக்கும் செபியை கம்பெனிகள் விவகாரத்துறை கேட்டுக்கொண்டது. விசாரணையில், நிதி அல்லது  கணக்கு வழக்குகளைத் தவறாகக் கையாளுதல், விதி மீறல்கள் போன்றவற்றைக் கண்டுபிடித்த செபி, அவற்றை உப்புமா கம்பெனிகள் என்று அறிவித்ததுடன், அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு பங்குச் சந்தைகளுக்கும் அறிவுறுத்தியது.  அந்தப் பட்டியலிலுள்ள நிறுவனங்களிடமிருந்தும் கோடிக் கணக்கான ரூபாய்களை வழிப்பறிசெய்துள்ளது பாஜக. இவை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக 2017இல் அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், 2019-20, 2022-23இல் குஜராத்தைச் சேர்ந்த கைத்ரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.1.76 கோடி, 2019-20இல் தில்லியைச் சேர்ந்த லாஜிக்ஸ் சாஃப்டெல் நிறுவனத்திடமிருந்து ரூ.1 கோடி போன்றவை அப்பட்டியலில் உள்ள நிறுவனங்களிலிருந்து பாஜக செய்துள்ள வசூல் வேட்டைக்கு உதாரணங்கள். ஏற்கெனவே பாஜகவிற்கு நிதியளித்திருந்த க்ரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன், அதுனிக் மெட்டாலிக்ஸ் போன்ற நிறுவனங்களும், அந்தத் தவறான நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பாஜகவுடன்தான் இருக்கிறார்கள் என்பதையே விளக்குகிறது.  இந்நிலையில், மத்திய நிதியமைச்சரும், கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன், உப்புமா கம்பெனிகளைக் கண்டறிவதில் அரசுக்கு தணிக்கையாளர்கள் உதவ வேண்டும் என்று கடந்த 2023 ஜூலையில் வேண்டு கோள் விடுத்தார். அந்த வேண்டுகோளின் உண்மையான பொருள், “எங்களுக்கு மாமூல் தராம இன்னும் எத்தனைப் பேர் ‘தொழில்’ நடத்துறாங்கன்னு கண்டுபிடிக்க உதவ வேண்டும்” என்பதாகவே தோன்றுகிறது. 

எனக்கு நீ; உனக்கு நான்!

மும்பை நகரில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மேம்பாலம் 2021இல் இடிந்து விழுந்தது அப்போது பரபரப்பான செய்தியாக இருந்தது. அதைக் கட்டிய ஜே குமார் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனமும் பாஜகவிற்கு  பல கோடி ரூபாய் மாமூல் செலுத்தித்தான் அப்படியான ஒப்பந்தங்களையே பெற்றது. 2015-16இல் அந்நிறுவனம் பாஜகவுக்கு அளித்த நன்கொடை ரூ.2 கோடி. சாலை பழுது நீக்கும் பணியில் ரூ.1,500 கோடி ஊழலில் அந்நிறுவனம் ஈடுபட்டதைக் கண்டுபிடித்த மும்பை பெருநகர மாநகராட்சி, 2016 ஏப்ரலில் அந்நிறுவனத்தைத் தகுதி நீக்கம் செய்து, 7 ஆண்டுகளுக்குக் கருப்புப் பட்டியலில் வைத்தது. ஆனால், அடுத்த 3 மாதங்களிலேயே, மும்பை மெட்ரோ கட்டுமானத்திற்கான ரூ.5,012 கோடி பணிகளில் ஒரு பகுதிக்கான ஒப்பந்தம் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்டதும், பாஜகவிறகு ரூ.5 கோடியை அளித்த இந்நிறுவனம், அடுத்த ஆண்டில் மேலும் ரூ.5.25 கோடியை அளித்தது. அதைத் தொடர்ந்து, 7 ஆண்டு கருப்புப் பட்டியல் காலம் 3 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. தேவையான தகுதிகள் இன்றியே துவாரகா விரைவுச் சாலைக்கான ரூ.1,349 கோடி ஒப்பந்தம் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. விபத்துகள், முறைகேடுகள் என்று மீண்டும் மீண்டும் தவறு செய்கிற இந்நிறுவனத்திற்கு, கடந்த மாதத்தில் மும்பை கடற்கரைச் சாலைத் திட்டத்திற்கான ரூ.4,548 கோடி ஒப்பந்தமும் வழங்கப்பட்டிருக்கிறது.

தோண்டத் தோண்ட ஊழல் எலும்புக்கூடுகள்

நிலக்கரிச் சுரங்க ஊழலில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ரூ.100 கோடி வருமான வரி ஏய்ப்பு, ரூ.17 கோடி ஜிஎஸ்டி முறைகேடு போன்றவற்றிற்காக இயக்குனர் கைது செய்யப்பட்ட கேஜேஎஸ் குழுமத்திடமிருந்து பாஜக பெற்ற ரூ.3 கோடி மற்றோர் உதாரணம்.  ஜேபி இஸ்கான் அளித்த ரூ.3.6 கோடி, கெபாசைட் எஞ்சினியரிங் அளித்த ரூ.6 கோடி, விஷால் ஃபேப்ரிக்ஸ் அளித்த ரூ.3 கோடி, எம்டி குழுமம் அளித்த ரூ.36 கோடி, திலீப் பில்ட்கான் அளித்த ரூ.2.5 கோடி, தீப் இண்டஸ்ட்ரீஸ் அளித்த ரூ.2.47 கோடி, திரிவேணி எர்த்மூவர்ஸ் அளித்த ரூ.7.09 கோடி, ட்ரைடண்ட் குழுமம் அளித்த ரூ.4.10 கோடி, அல்கெம் லேபரெட்டரீஸ் அளித்த ரூ.1.25 கோடி ஆகியவை, நிதியளிக்காத நிறுவனங்கள், நிதியளித்திருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிதியளிக்காத நிறுவனங்கள் போன்றவற்றின்மீது வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை ரெய்டுகள் நடத்துதல், வழக்குப் பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு பாஜக நடத்திய வசூல் வேட்டைக்கான உதாரணங்கள்.

வெறும் ‘டிரைலர்’ தான்

இவையெல்லாம் ‘வெறும்’ சில கோடிகளாகத்தானே இருக்கின்றன? ஆம்! இவையெல்லாம் தேர்தல் பத்திரங்கள் அல்லாத முறைகளில் வழங்கப்பட்டதால், யாரால், எப்போது, யாருக்கு வழங்கப்பட்டவை என்று கண்டு பிடிக்க முடிந்தவை. அதனால்தான், செய்திகளோடு ஒப்பிட்டு, எதற்காக வசூலிக்கப்பட்ட மாமூல் என்று கண்டறிய முடிந்திருக்கிறது. உண்மையில் இது ட்ரைலர்தான். மெயின் பிக்ச்சர் என்பது, தேர்தல் பத்திரங்களின் வரிசை எண்களுடன் கூடிய பட்டியலை ஸ்டேட் வங்கி வெளியிட்டபின்தான் வரவிருக்கிறது. அது,  கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு உலகி லேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக என்பதை ஐயம் திரிபு அற நிரூபிக்கவிருக்கிறது!



 

 

 

;