states

img

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய எம்எல்ஏக்களுக்கு ரூ.5 கோடி அளிக்கும் பாஜக கூட்டணி அரசு

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில்  பணப்பட்டுவாடா செய்ய எம்எல்ஏக்களுக்கு ரூ.5 கோடி அளிக்கும் பாஜக கூட்டணி அரசு

மும்பை உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கை யையடுத்து மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா செய்ய பாஜக கூட்டணி அரசு எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.5 கோடி கருவூலத்தில் இருந்து வழங்கி வருவதாக “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்) முதன்மைச் செயலாளரும், எம்எல்ஏவுமான ரோகித் பவார் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில்,”அரசு பணிகள் தொடர்பாக மகாராஷ்டிரா மாநில நடுத்தர வர்க்க ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.80,000 கோடி அளவில் நிலுவைத் தொகை உள்ளது. கேட்டால் அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஆளும் கட்சியின் 54 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.5 கோடி வழங்க மட்டுமே எப்படி பணம் இருக்கிறது? இது மேம்பாட்டு நிதி என்ற பெயரில் அரசாங்க கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்து உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகளை வாங்குவதற்கான (பணப்பட்டுவாடா) அரசியல் சூதாட்டம் மட்டுமல்ல, ஜனநாயகத்தை கேலி செய்யும் நிகழ்வு ஆகும்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.