பீகாரின் நிலை பிற மாநிலங்களுக்கும் ஏற்படும்
அரசியல் ஆர்வலர் யோகேந்திர யாதவ் எச்சரிக்கை
புதுதில்லி சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் சரிபார்ப்புப் பணி எந்த மாநிலத்தில் மேற் கொள்ளப்பட்டாலும் அதன் விளைவுகள் பீகாரில் ஏற்பட்டதை போல தான் ஏற்படும் என அரசியல் ஆர்வலர் யோகேந்திர யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பீகாரில் வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளது வாக்காளர் சரிபார்ப்பு செயல்முறை யைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வி அல்ல, மாறாக இது அதன் வடிவமைப்பிலேயே உள்ள குறைபாடு எனவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் பீகாரில் மேற் கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நடந்துள்ள பல்வேறு முறை கேடுகள் ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வரு கிறது. இந்நிலையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பாஜகவின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் உள்ளது. தேர்தல் ஆணையம் அப்பட்டமாக தனது கடமைகளை மறந்து ஒரு சார்புத் தன்மையுடன் செயல்படு கிறது என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டன. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவா திக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் பாஜக அரசு அதற்கு ஒத்து ழைக்க மறுத்து வருகிறது. இறந்தவர்களாக அறிவிக்கப்பட்ட இருவர் நீதிமன்றத்தில் ஆஜர் இந்நிலையில் இந்த நடைமுறைக்கு எதி ராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செவ்வாய்க்கிழமையன்று விசார ணைக்கு வந்தன. அப்போது, கல்வியாளரும் அரசியல் ஆர்வலருமான யோகேந்திர யாதவ், தேர்தல் ஆணையத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறப்பு தீவிர திருத்தம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தியுள்ளார். வடிவமைப்பிலேயே குறைபாடுள்ளது பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது வாக்காளர் சரிபார்ப்பு செயல்முறையைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வி அல்ல, மாறாக இது அதன் வடிவமைப்பிலேயே உள்ள குறைபாடு. இந்தச் சரிபார்ப்புப் பணி எந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் அதன் விளைவுகள் இதேபோன்றுதான் இருக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். யோகேந்திர யாதவ் முன் வைத்த குற்றச் சாட்டுகளை, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி எதிர்த்ததுடன், அது ஒரு நாடகம் எனவும் குற்றச்சாட்டை ஏற்க மறுத்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையம் இந்தப் பணியைத் தொடர்ந்தால், வாக்காளர் பட்டி யலில் இருந்து நீக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும் என்று யோகேந்திர யாதவ் வாதிட்டார். அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டால் தலையிடுவோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்ததை குறிப் பிட்டு அதிகளவிலான வாக்காளர்களை நீக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பீகாரின் மொத்த வயது வந்தோரின் மக்கள் தொகை 8.18 கோடியாக உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் 7.9 கோடி நபர்களை மட்டுமே வாக்காளர்களாக தற்போது கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 9 சதவீதம் குறைவு விடுபட்டவர்கள் எண்ணிக்கையில் இறந்த வர்களோ அல்லது புலம்பெயர்ந்தவர்களோ சேர்க்கப்படவில்லை. சரியாக செய்யப்பட்டி ருந்தால் வாக்காளர் பட்டியலில் 8 கோடியே 18 லட்சம் பேர் இருக்க வேண்டும். ஆனால் 7.9 கோடி பேர் மட்டுமே உள்ளனர். எந்தவொரு சரி பார்ப்புப் பணியும் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். வாக்காளர் தகுதி விகிதத்தில் 97 சதவீதமாக இருந்த மக்களின் எண்ணிக்கை ஒரேயடியாக 88 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்த நீக்கம் மேலும் தொடர்கிறது. 7.9 கோடி என்ற வாக்காளர்களின் எண்ணிக் கையில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. வாக்களிக்கத் தகுதியுள்ள வயது வந்தோரின் சதவீதம் என்ன என்பதை கருத்தில் கொண்டு தான் நாம் பார்க்க வேண்டும் என்றும் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். சேர்ப்பவர்களையல்ல, நீக்கப்படுபவர்களை மட்டும் தேடுகிறார்கள் மேலும் பீகாரில் நடைபெறும் இந்தத் திருத்தப் பணியானது இந்தியாவில் வாக்காளர் பட்டியல் திருத்த வரலாற்றிலேயே ஒரு புதிய வாக்காளரைக் கூட சேர்க்காமல் முதல் முறை யாக நடைபெறும் திருத்தப்பணி. இது அசாதார ணமானது. இந்த நடவடிக்கை தீவிரமாக வாக்கா ளர்களை நீக்குவதற்காக எடுக்கப்பட்டது. படிவம் 6-ஐ பூர்த்தி செய்யலாம் என்று கூறி னாலும், வீடுகளுக்கு மக்களிடம் செல்லும் போது நீக்கப்பட வேண்டியவர்களை மட்டுமே தேடு கிறார்கள் என அவர்கள் குற்றம் சாட்டியதுடன் உண்மையான புதிய வாக்காளர்கள் என்ன ஆனார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களை வெறுக்கும் போக்கு 25 இலட்சம் ஆண்களின் பெயர்களும், 31 இலட்சம் பெண்களின் பெயர்களும் நீக்கப் பட்டுள்ளன. அதாவது ஆண்களை ஒப்பிடும் போது, பெண்களின் பெயர்களே அதிகம் நீக்கப் பட்டுள்ளன. இது பெண்களை வெறுக்கும் போக் கைக் காட்டுகிறது என்றும் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் மட்டுமல்ல, உலக வரலாற்றி லேயே வாக்களிக்கும் உரிமையை மிகப் பெரிய அளவில் பறிக்கும் நடவடிக்கையை நாம் இப்போது காண்கிறோம். அவர்கள் தங்களின் வேலையைத் தீவிரமாகச் செய்தால், இந்த எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும். 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட சாத னையை நாம் முறியடிப்போம். ஒரு குடிமகன் வாக்களிக்க வேண்டிய பொறுப்பை அரசிடம் இருந்து தனிநபருக்கு மாற்றியுள்ளதால், உலக ளாவிய வயது வந்தோர் வாக்களிக்கும் உரிமை முறையில் இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத் தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.