புதுதில்லி, மார்ச் 27 - அதானியின் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும்; ராகுல் காந்தி மீதான தகுதிநீக்க நட வடிக்கையைக் கண்டித்தும் எதிர்க்கட்சி கள் நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு கறுப்பு உடையணிந்து போராட்டம் நடத்தினர். மேலும், விஜய் சவுக் நோக்கி அவர்கள் பேரணியும் சென்றனர். “சத்யமேவ ஜெயதே; ஜனநாய கத்தைக் காப்பாற்றுங்கள்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி, விஜய் சவுக் நோக்கிச் சென்று அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “கடந்த சில ஆண்டுகளில் அதானியின் சொத்து எப்படி இவ்வளவு பெருகியது? வெளிநாடுகளுக்குச் செல் லும்போது, நீங்கள் அவரை எத்தனை முறை அழைத்துச் சென்றீர்கள்? அதா னிக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்வி களுக்கு உங்களால் ஏன் பதில் அளிக்க முடியவில்லை?” என்று பிரதமர் மோடி யை நோக்கி கேள்விகளை எழுப்பினார். மேலும், “அதானி விவகாரத்தில் எங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும். இதனை அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு ஏன் பயப்படு கிறது? இங்குதான் ஏதோ தவறாக உள்ளது என்று (‘தால் மே குச் கலா ஹை’) சொல்கிறோம்” என்று கூறிய மல்லிகார்ஜூன கார்கே, “ராகுல் காந்தியைப் பழிவாங்க விரும்புகிறீர்கள், அதனால்தான் கர்நாடகாவின் கோலாரில் பேசப்பட்ட கருத்துக்கள் தொடர்பான வழக்கை குஜராத்திற்கு மாற்றினீர்கள். அவரது பதவி பறிக்கப் பட்ட நாள் ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள்; அதனால்தான் எதிர்க்கட்சி உறுப்பினர் கள் அனைவரும் கறுப்பு உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதாதளம், பாரத் ராஷ்டிர சமிதி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கேரளா காங்கிரஸ், ஆர்எஸ்பி, ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டுக் கட்சி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத் தில் கலந்து கொண்டனர். இதுவரை எதிர்க்கட்சிகளின் அணியை புறக் கணித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்றது. அந்தக் கட்சியின் எம்.பி.க்கள் பிராசன் பானர்ஜி, ஜவஹர் சிர்கார் ஆகியோர் கலந்து கொண்டனர். “ராகுல் காந்தி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால், அதற்காக மட்டும் இந்த ஆதரவு அளிக்கப்படு கிறது; அனைவருக்கும் எதிராக ஜன நாயகத்திற்கு விரோதமாக தாக்குதல் நடக்கும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எங்கள் முடிவின் வெளிப்பாடு இது” என்று திரிணாமுல் எம்.பி. ஜவஹர் சிர்கர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மட்டு மன்றி, திமுக, இடதுசாரிகள், தெலுங் கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருக்கும், அம்மாநில முதல்வர் சந்திர சேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி, சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணி) உறுப்பினர்கள் ஆகியோரும் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒத்தி வைப்பதே நோட்டீஸ்
முன்னதாக, இரண்டாவது கட்ட நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 9-ஆம் நாள் கூட்டம், திங்களன்று காலை 11 மணிக்கு கூடிய நிலையில், அங்கும் அதானி, ராகுல் காந்தி விவகாரங்களை எழுப்பி எதிர்க் கட்சி எம்.பி.க்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ராகு லின் பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட் டோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினர். “1860-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் வரலாற்றில், கிரிமினல் அவதூறு வழக்கில் அதிக பட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும். ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கும் ஆளும் கட்சியின் எண்ணம் இதில் தெளிவாகத் தெரிகிறது. எந்த அடிப்படை யும் இல்லாமல் இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பது, கீழமை நீதிமன்றங்களில் அரசு தலையிடுவதையே வெளிப் படுத்துகிறது. இந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை விவாதிக்க சபையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆவேசமான முழக்கங்க ளால், மக்களவை துவங்கிய 20 விநாடிகளிலும், மாநிலங்களவை ஒரு நிமிடத்திலும் ஒத்திவைக்கப்பட்டன. அதன்பிறகு நாடா ளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், விஜய் சவுக் நோக்கி பேரணியும் சென்றனர்.
தேசமே கேட்கிறது...
இதனிடையே ‘கறுப்புச் சட்டை’ என்ற தலைப்பில் டுவிட்ட ரில் பதிவு ஒன்றை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், “தேசமே கேட்கிறது... பிரதமரே! உங்கள் அருமை நண்பர் அதானிக் காக ஒரு நாடாளுமன்ற கூட்டத் தொடரே அர்ப்பணமா? நாடா ளுமன்றக் குழு விசாரணைக் கூண்டில் அதானி நிற்பதில் உங்கள் கால்கள் வலிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய துடன், “நீங்கள் கை வைத்திருப்பது ராகுல் காந்தி மீது அல்ல; இந்திய ஜனநாயகத்தின் மீது... அதானி மீது ஒரு துரும்பு கூட படாமல் பாதுகாக்கும் ‘கூட்டுக் களவை’ அறிவார்கள் மக்கள்! தகுதி நீக்கம் என்ற பெயரில் நடக்கும் உரிமை நீக்கத்தை அனுமதிக்கமாட்டோம்” என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.