states

img

மூத்த குடிமக்களின் சலுகையை பறித்து ரூ. 1500 கோடி ‘மிச்சம் பார்த்த’ மோடி அரசு!

புதுதில்லி, மே 17 - ரயிலில் பயணம் செய்யும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50  சதவிகிதமும், 60 வயதுடைய ஆண் களுக்கு 40 சதவிகிதமும் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. மூத்த குடிமக்களுக்கான இந்த கட்டணச் சலுகையை எப்படி நிறுத்து வது? என்று நீண்டகாலமாக மோடி அரசு தருணம் பார்த்திருந்தது. 2020 மார்ச் மாதம் கொரோனா பொதுமுடக்கத்தை அதற்குப் பயன்படுத்திக் கொண்டது. மறு அறிவிப்பு வெளியிடும் வரை மூத்த குடிமக்களுக்கான கட்டண சலு கையை ரத்து செய்வதாக அறிவித்தது. தற்போது கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு, ரயில்கள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், 2020 மார்ச்சில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான சலுகையை இப்போதுவரை திருப்பி அளிப்பதாக இல்லை. அதைப் பற்றிய யோசனையே தங்களுக்கு இல்லை என மோடி அரசு கூறிவிட்டது.

மூத்த குடிமக்கள் உள்பட அனைத்துப் பிரிவினருக்கும் கட்டண சலுகை வழங்குவது ரயில்வே நிர்வா கத்திற்கு கடுமையான நிதிச் சுமையை  ஏற்படுத்தும். இப்போதைய சூழலில்,  மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கும் திட்டம் இல்லை என்று கடந்த மார்ச் மாதம் ரயில்வே அமைச்சர்  அஸ்வனி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வ மாகவே நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில்தான், மூத்த குடி மக்களுக்கு கட்டண சலுகையை ரத்து  செய்ததன் மூலம் இந்திய ரயில்வேக்கு கடந்த 2 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பி யிருந்த கேள்விக்கு பதில் அளிக்கப் பட்டு உள்ளது. அதில், “2020 மார்ச் 20-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ம் தேதி வரை யிலான காலகட்டத்தில் 7 கோடியே 31  லட்சம் மூத்த குடிமக்கள் ரயிலில் பய ணம் செய்துள்ளனர். இதில் 4 கோடியே  46 லட்சம் என்ற எண்ணிக்கையில் 60 வயது முதலான ஆண்களும், 2  கோடியே 84 லட்சம் என்ற எண்ணிக்கை யில் 58 வயது முதலான பெண்களும், 8 ஆயிரத்து 310 திருநங்கையரும் பயணம் செய்துள்ளனர். இந்த மூத்த  குடிமக்கள் மூலம் கடந்த 2 ஆண்டு களில் இந்திய ரயில்வே துறைக்கு 3 ஆயிரத்து 464 கோடி ரூபாய் வரு மானம் கிடைத்துள்ளது. இதில் கட்டணச் சலுகையை ரத்து செய்ததன் மூலம் 1500 கோடி ரூபாய் ரயில்வே-க்கு வருவாய் கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.