ஆந்திரா மாநிலத்தில் வரும் மே மாதம் 13 அன்று சட்டமன்றம், மக்களவை என இரண்டிற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தும், காங்கிரஸ் - இடதுசாரி கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணியும், பாஜக - தெலுங்கு தேசம் - ஜனசேனா ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆந்திராவில் மும்முனை போட்டி மாநிலத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சரியாக இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், “மேமந்த சித்தம்’ (நாங்களும் தயார்)” என்ற பிரசாரத்தை முன்வைத்துக் கடந்த 12 நாட்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முதல்வருமான முதல்வர் ஜெகன்மோகன் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், சனியன்று இரவு விஜயவாடாவின் சிங்நகர் தாபா அருகே கோட்ல சென்டர் எனும் இடத்தில் பேருந்தின் மேற்கூரையில் நின்றபடி ஜெகன்மோகன் பிரசாரம் மேற்கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் ஜெகன் மோகனை நோக்கி மலர்களுடன் கற்களை கொண்டு வீசினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஜெகன்மோகனின் இடது கண்ணுக்கு மேல் உள்ள நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. ஜெகன்மோகனுடன் நின்று கொண்டிருந்த ஆந்திர மாநில முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எல்லம்பல்லி ஸ்ரீநிவாஸ்க்கும் கல்லடி காயம் ஏற்பட்டது. உடனே ஜெகன்மோகன் ரெட்டிக்கு, பேருந்திலிருந்த மருத்துவர் மூலம் முதலுதவி செய்யப்பட்டது. சந்திரபாபு மீது குற்றச்சாட்டு முதல்வர் ஜெகன்மோகன் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு ஆந்திரா முழுவதும் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர அமைச்சர் அம்பதி ராம்பாபு,”முதல்வர் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு தான். இந்தச் சம்பவம் மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி வன்முறையைத் தூண்டுகிறது என்பதைத் தெளிவாக நிரூபித்துள்ளது” எனக் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. முக்கியமாக பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வன்முறை கலச்சாரம் காரணமாக மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் கால வன்முறை சம்பவங்கள் அரங்கேறுவது போன்று தங்கள் மாநிலத்திலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிவிடுமோ என ஆந்திர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.