states

img

பராமரிக்கப்படாத பண்பாட்டுச் சின்னங்களும் சிதைந்து கொண்டிருக்கும் அடையாளங்களும் - ஸ்ரீராமுலு

சங்ககாலம் என்பது பொதுவாக கி.மு. 3 நூற்றாண்டிலிருந்து கி.பி. 3 நூற்றாண்டு வரை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், கீழடியில் கண்டறியப்பட்ட பண்பாட்டு குவியல்கள், அதனைத் தொடர்ந்து நடந்து வரும் கொடுமணல் மற்றும் பொருந்தல் அகழ்வாய்வில் தமிழில் (தமிழ் பிராமி) எழுத்துக்களில் கிடைத்த வரலாற்று கலைப் பொருட்களின் மாதிரிகள் தமிழ் பிராமியின் காலத்தை கிமு 6 நூற்றாண்டிற்கு மாற்றுகிறது. மயிலாடும்பாறையின் ஆய்வு முடிவுகள் வேளாண் சமூகத்தின் தொடக்கம் தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்புக் காலப் பண்பாட்டையும் வலுவாக உறுதிப்படுத்தியிருக்கிறது. நிலப்பரப்பின் மேல் இன்னமும் காணக்கூடிய பண்டைய இடங்கள் மற்றும் எச்சங்களை கண்டறிந்து பதிவுசெய்தல் தொல்லியல் ஆராய்ச்சியின் கள ஆய்வு. பூமியின் மேற்பரப்புக்கு கீழே படிந்துள்ள தொல்பொருள் எச்சங்களை வெளிக்கொண்டு வருவது அகழ்வாய்வு. இரும்புக் காலம், பெருங்கற்காலம்,

நுண்கற்காலம், வரலாற்றுக்கு முந்திய காலம், இடைக்காலம் போன்ற பண்டைய சகாப்தங்கள் தொடர்பான 43 களங்களில் நமது தொல்லியல் துறை  1968-69 முதல் 2019-21 வரை அகழ்வாய்வுகளை நிறைவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 2016 முதல் 2021  வரையிலான அகழ்வாய்வில் 33,426 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், கீழடியிலிருந்து மீட்கப்பட்ட 6170 தொல்பொருட்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில் சமய கட்டடங்கள் உட்பட 93 பண்டைய வரலாற்றுச் சின்னங் களை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறி வித்திருக்கும் தொல்லியல் துறை, மேலும் 15 அகழ்வைப்பகங்களையும் நிறுவி யிருக்கிறது. நமது பண்பாட்டின் தொல்லியல், கல்வெட்டியல் சான்றுகளை அடிப்படை யாகக் கொண்ட கள ஆய்வில்  செப்பேடு கள், தொல் பொருட்கள், பொற்காசுகள், உலோக மோதிரங்கள், சிலைகள், மண்பானைகள், பீங்கான் போன்ற 13,990 தொல்பொருட்கள் மற்றும் வரலாற்று முக்கியம் வாய்ந்த கலைப் பொருட்களை கண்டுபிடித்து தன்வசம் வைத்துள்ளது நமது தொல்லியல் துறை. தமிழ்நாட்டில் 1972 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட காலத்தில் 38 கோவில்கள், 12 கல்வெட்டுகள், 8 ஓவியங்கள்,11 கோட்டைகள், 5 சிற்பங்கள், 8 கல்லறைகள், 3 அரண்மனைகள், 2 தூண்கள், 2 தொட்டி கள், 3 சத்திரம் உள்ளிட்ட 95 வரலாற்று சின்னங் களையும் தமது அகழ்வாராய்ச்சியில் கண்டறிந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட தொன்மை யான வரலாற்றுச் சின்னங்கள், பாதுகாக்கப் பட்ட தொல்லியல் தளங்கள் என 3 மாதத்திற்குள் அறிவித்திருக்க வேண்டிய தொல்லியல்துறை, 2 முதல் 13 ஆண்டுகள் வரைக்கும் காலம் கடத்தி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், வருவாய்த் துறை  உள்ளிட்ட  பிற துறைகளுடன் போதுமான ஒருங்கிணைப்பு இல்லை என்பதே. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி பாதுகாக்கப்பட்ட 92 வரலாற்றுச் சின்னங் களில் அரியலூர் மாவட்டம் மாளிகைமேடு உள்கோட்டை கிராமத்திற்கு மட்டும் உரிமை  பெறப்பட்டுள்ளது. 45 வரலாற்றுச் சின்னங்கள் அரசு நிலங்களில் அமைந்திருந்த போதும் அதற்கான உரிமையை பெற துளி கூட முயற்சி எடுக்கவில்லை. இதனால் 91 வரலாற்றுச் சின்னங்கள் 99 விழுக்காடு சேதமடைந்து உருக்குலைந்து வருகிறது. காற்றில் பறக்கும் விதிமுறைகள்... தொல்லியல் துறையின் பாதுகாப்பு எல்லையிலிருந்து 100 முதல் 200 மீட்டர் வரையில் அரசின் அனுமதியின்றி சுரங்கம், குவாரி என எந்தப் பணிகளும் செய்யக்கூடாது என்று விதிகள் இருந்தும் அவை முற்றிலும் மீறப்பட்டுள்ளன. உதாரணம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கிலேயச் சிப்பாய்கள் நினைவாக  கட்டப்பட்ட இடத்தில் கல் உடைக்கும் எந்திரங்கள் (கிரஷர்) அமைத்து தொழில் நடத்தப்படுகிறது. 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் எலும்புக்கூடுகள் அடங்கிய கலசங்களைக் கொண்ட மதுரை மாவட்டம் கோவலன் பொட்டல் பகுதியில் எழுப்பப்பட்ட நினைவுச்சின்னப் பகுதி உள்ளூர் மக்களின் இடுகாடாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் உயர்மட்டப் பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் மலைக்கோட்டை எல்லைக்குள் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.  இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் மற்றும் காவல் துறை எடுத்த நடவடிக்கைகளும் பலன் தரவில்லை. அதேபோல் வந்தவாசி கோட்டையில் அங்கீகரிக்கப்படாத தனியார் வீடு ஒன்றின் கட்டுமானப் பணி நடைபெற்றுள்ளது. இதுவும் அகற்றப்படாமல் உள்ளது.

சிதையும் அடையாளங்கள்!

விழுப்புரம் மாவட்டம் வானூர் உலகாபுரம் பெருமாள் விஷ்ணு கோவிலில் துறையின் அனுமதி இல்லாமல் கிராம மக்களே 15 அடி உயரத்திற்கு செங்கற்களால் கூடுதல் கட்டடம் எழுப்பியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் முகமதியர்களால் கி.பி 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையில் பேரூராட்சி நிர்வாகமே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவி வரலாற்று நினைவுச் சின்னங்களை சேதப்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மானம்பாடியில் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழ மன்னனால் கட்டப்பட்ட கோவிலின் அடியில் உள்ள கல்வெட்டுகள் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டும்  முறையாக பராமரிக்கப்படவில்லை. விளைவு, சிலை சிற்பங்களை சுற்றி செடிகள் மற்றும் புதர்மண்டிக் கிடக்கிறது. மராட்டியர்களின் அதிகாரப்பூர்வமாக இல்லமான புகழ்பெற்ற தஞ்சாவூர் அரண்மனையின் மர வேலைப்பாடுகள், ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட ராயல் பால்கனி, மராட்டிய கால சுவர் ஓவியங்கள், ஆயுத கோபுரம், மணி கோபுரங்கள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் மங்கியும், மரத் தூண்கள் கரையான்களால் சேதமடைந்தும் உள்ளன. ஆரம்பகால பாண்டியர்களின் குகை சிற்பக்கலைக்கு சான்றாக 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மதுரையின் லாடன் கோவில் பாதுகாக்கப்பட்ட சின்னமாக 1993 ஆம் ஆண்டில்தான் அறிவிக்கப்பட்டது. குறுகிய காலத்திற்குள்ளேயே அனைத்துச் சுவர்களும் எண்ணெய் படிந்தும் கண்மூடித்தனமான கிறுக்கல்களாலும் மொத்த இடமும் சிதைந்து கிடக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலை, ஆலம்பாடி கிராமங்களில் வரலாற்றுக்கு முந்தைய மூன்று பாறை ஓவியங்கள், மதுரை மாவட்டம், மீனாட்சிபுரம், திருவாதவூர், சோழவாண்டிபுரம், யானைமலை, கருங்காலக்குடி சின்னமலை சமண படுகைகள், ஜம்பை பிராமி கல்வெட்டுகள், வரலாற்றுச் சின்னங்கள் இருந்தும் அந்தப் பகுதிகளுக்கு சென்றுவர வழித்தடமும் அணுகுசாலையும் இல்லை. பராமரிப்பும் கிடையாது. இதனால் வவ்வால் மற்றும் பறவை எச்சங்களால் சுகாதாரமற்ற நிலையில் காட்சியளிக்கிறது. மனிதகுல வரலாற்றில் முக்கியமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இரும்பின் அறிமுகம் ஒன்றாகக் கருதப்படுகிறது. பண்டைய மக்களுக்கு வன நிலங்களை விவசாய நிலமாக கொண்டுவர இரும்பின் அறிமுகம் பெரிதும் உதவியிருக்கிறது. அதுமட்டுமின்றி, விவசாய உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கவும் வழி வகுத்துள்ளது. இந்த வேளாண் சமூகத்தின் தொடக்கம் தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை  ஆய்வு உறுதி செய்திருப்பது தமிழ் பண்பாட்டில் ஒரு புதிய திருப்பமாகும். இதன்படி, தமிழகத்தில் இரும்பு 4,200 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கற்காலப் பண்பாட்டுக் காலத்தின் பிற்பகுதி கி.மு. 2,200 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த அகழ்வாய்வில், வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக் காலம் வரையிலான பண்பாட்டின் வேர்கள் தமிழ்நாட்டிலிருந்து துவங்கியதை வெளிக்கொண்டு வந்து தமிழர்களின் வளமான பண்பாட்டு மரபுகளை நிரூபிப்பதுடன் நமது தொப்புள்கொடி உறவுகளை உலக வரைபடத்தில் நிலை நிறுத்தியிருக்கிறது. இவற்றை பாதுகாப்பது நமது கடமையாகும்.

ஆதாரம்:  இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கைகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வெளியீடுகள்