states

1000 கோடி கொள்ளையடித்தவர்களை விட்டுவிட்டு விவசாயிகளை மட்டும் பிடித்துக் கொள்வீர்களா?

புதுதில்லி, மே 17 - கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத பெரிய தொழிலதிபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்காத வங்கிகள், விவசாயிகளை மட்டும் துன்புறுத்துவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்லால் பட்டிதார் என்ற விவசாயி மகாராஷ்டிர வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்தார். அதனை ஒருமுறை கடன் தீா்வு (One Time Settlement Schemes -OTS) திட்டத்தின் கீழ் திருப்பிச் செலுத்த வங்கியை அணுகினார். மோகன்லால் பெற்ற கடனை ஓடிஎஸ் திட்ட வரையறைகளின் கீழ் மகாராஷ்டிர வங்கி முதலில் ரூ. 36 லட்சத்து 50 ஆயிரமாக நிர்ணயித்து தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் ரூ. 35 லட்சத்தை வங்கியில் செலுத்தியுள்ளார். ஆனால், அவரை மீண்டும் தொடர்புகொண்ட வங்கி, கடனை முழுமையாகத் தீா்க்க ரூ. 50 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மோகன்லால் பட்டிதார் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அவர் முன்பு செலுத்திய தொகையையே ஏற்றுக்கொள்ளுமாறு வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர வங்கி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இந்த வழக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் சூர்யா காந்த் அமர்வு மனுவை விசாரித்தது. அப்போது மகாராஷ்டிரா வங்கியின் நடவடிக்கையை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.  “1000 கோடிகளை கொள்ளையடிப்பவர்கள் மீது நீங்கள் வழக்குப் பதிவு செய்யமாட்டீர்கள், ஆனால் விவசாயிகளின் பிரச்சனை வந்தால் முழுச் சட்டமும் நடைமுறைக்கு வந்து விடுமா? மனுதாரர் 95 சதவிகித தொகையை திருப்பி செலுத்தியுள்ளார். அதனை வங்கியும் ஏற்றுள்ளது. தற்போது மீண்டும் கூடுதல் தொகையை கட்டுமாறு விவசாயியைத் துன்புறுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. இதுதொடர்பான வழக்கில் மத்தியப் பிரதேச நீதிமன்றம் நியாயமான தீர்ப்பைத்தான் அளித்துள்ளது. அதன்பிறகும் உச்சநீதிமன்றத்திற்கு வந்திருப்பது, விவசாயிகளின் குடும்பங்களை பொருளாதார ரீதியாக சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்” என்று நீதிபதிகள் காட்டமாக விமர்சித்துள்ளனர்.