states

தீக்கதிர் விரைவு செய்திகள்

நீட் தோ்வை ஒத்திவைக்க  10 ஆயிரம் தோ்வா்கள் கடிதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று, தேசிய தேர்வுகள் முகமைக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வர்கள் கடிதம்  எழுதியுள்ளனர். ஜூலை முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வும் (CUET), ஜூலை 21-ஆம் தேதி ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) இரண்டாம் கட்டத் தேர்வும் நடைபெற உள்ளன. இவற்றுக்கிடையே, ஜூலை 17-இல் நீட் தேர்வை நடத்துவது, மாணவர்களுக்கு கூடுதல் சுமை யாக இருக்கும். எனவே, மாணவர்கள் தேர்வுக்கு தங்களை நன்கு  தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக 2022 நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவுக்கு பாமக, பாஜக ஆதரவு!

தமிழகத்தில் காலியாகவிருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மே 24-ஆம்  தேதி தொடங்குகிறது. இதில், திமுக 4 இடங்களில் வெற்றிபெற முடியும் என்ற நிலையில், 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு ஒதுக்கி உள் ளது. அதிமுக-வுக்கு 2 இடங்கள் கிடைக்கும் என்ற நிலையில், அந்தக் கட்சிக்கு பாமக, பாஜக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இலங்கை வழியில் இந்தியா:  ராகுல் வரைபட ஒப்பீடு! 

இந்தியாவின் பொருளாதாரம், இலங்கை சென்ற அதே வீழ்ச்சிப் பாதையில் செல்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக 3 வரைபடங்கள் மூலம் ஒப்பிட்டுள்ளார். 2017ம் ஆண்டில் இருந்து இரு நாடுகளி லும் (இந்தியா, இலங்கை) வேலையின்மை அதிகரித்து 2020ம்  ஆண்டில் உச்சத்தை எட்டியது. 2021-ஆம் ஆண்டில்  இருநாடு களிலுமே வேலையின்மை சற்று குறைந்தது.  இலங்கையில்  2017  முதல் பெட்ரோல் விலை உயர்ந்தது. இந்தியாவில் 2019 முதல்  பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. 2020 மற்றும் 2021-இல் இந்தியா மற்றும் இலங்கையில் வகுப்புவாத சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது என்று வரைபடங்கள் மூலம் ராகுல் விளக்கியுள்ளார்.

கியான்வாபி மசூதி விவகாரம் 2024 தேர்தல் வரை போகும்

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியானது, இந்துக் கோயிலை இடித்துக் கட்டப்பட்டது என்ற விவ காரத்தை சங்-பரிவாரங்கள் திடீரென தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், “கியான்வாபி மசூதி விவகாரத்தை 2024 தேர்தல்வரை கொண்டு போக பாஜக திட்டம் போட்டுள்ளது. இந்த விவகாரத்தை பாஜக திட்டமிட்டே செய்து வருகிறது” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார். “நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. எரிபொருள் விலை உயர்வு, வேலையின்மை போன்றவற்றில் கவனம் செலுத்த பாஜக அரசுக்கு நேரமில்லை. ஆனால், இதுபோன்ற வெறுப்பை பரப்ப பாஜகவினர் ஒரு அட்டவணையே போட்டு வைத்திருக்கின்றனர்” என்று அவர் விமர்சித்துள்ளார்.

நாராயணகுரு, பெரியார் பாடம் நீக்கம்!

பாஜக ஆட்சி நடக்கும் கர்நாடக மாநில அரசு பாடநூல் களில் இருந்து நாராயணகுரு, பெரியார் போன்ற சமூக  சீர்திருத்தவாதிகளின் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து பெரியார் மற்றும் நாரா யணகுரு பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. மாவீரன் பகத் சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்த பாடமும் பள்ளிப் பாடப்புத்த கத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக, ஆர்எஸ்எஸ் நிறுவன தலைவர் கே.பி. ஹெக்டேவார் உரை பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

யாசின் மாலிக் குற்றவாளி:  என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு!

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் முகமது யாசின் மாலிக் குற்றவாளி என தில்லி என்ஐஏ (NIA) நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மே 10 அன்று விசாரணைக்கு வந்தபோது, “தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை” என்று யாசின் மாலிக் கூறியிருந்தார். இந்தப் பின்னணியில், யாசின் மாலிக் குற்றவாளி என தில்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரங்கள் மே 25 அன்று தெரிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

காஷ்மீர் பாதுகாப்பில் முன்னேற்றமும் இல்லை: உமர்!

“சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக திட்டமிட்ட படுகொலைகள்தான் நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் 3 படுகொலைகள் நடந்துள்ளன” என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார். “சட்டப்பிரிவு 370 தொடர்பான விவகாரத்தில் எங்கள் கருத்துக்களை நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம். சட்டத்தை நாங்கள் எங்கள் கைகளில் எடுக்கமாட்டோம். நாங்கள் வேறொரு நாட்டின் மொழியைப் பேசுபவர்கள் அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரறிவாளன் நிரபராதி இல்லை: அண்ணாமலை சொல்கிறார்

“பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை  ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக அவர் நிரபராதி அல்ல, அவரும் குற்றவாளிதான். ஆனால், திமுக அரசு அவரை நிரபராதிபோல கொண்டாடுகிறது. முதல்வர், அமைச்சர்கள் அனைவரும், ஒரு நிரபராதியை விடுதலை செய்வது போல  கொண்டாடுவது, பேசுவது எல்லாம், உண்மையில் முதல்வர் அர சியலைப்புச் சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு தான் ஆட்சி நடத்துகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.” என்று  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியுள்ளார்.
 

;