states

பெட்ரோல், டீசல் மீதான செஸ்வரியை முழுவதும் குறைக்காதது ஏன்?

திருப்பூர், மே 22 – பெட்ரோல், டீசல் மீதான செஸ்வரியை முழுவதும் குறைக்காதது ஏன் என்று ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகமான தியாகி  பழனிசாமி நிலையத்தில் தோழர் கே.தங்க வேல் நினைவு நூலகத்தை ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்த பின் கே.பால கிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் உள்ளிட்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஜவுளி ஆலை அதிபர்களே வேலை நிறுத்தம் நடத்த  வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏற்கெனவே பின்னலாடைத் துறையினர் இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்திய நிலையில், இப்போது விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாள் வேலை நிறுத்தம் நடத்துகின்றனர். இதற்கு அடிப்படை  காரணம் பருத்தி விலை மூன்று மடங்கு உயர்ந்து ஒரு கண்டி ரூ.1 லட்சத்து 5 ஆயிர மாக ஆகியுள்ளது. வேறு எதெதுவோ பேசும்  பிரதமர் மோடி பருத்தி விலை உயர்வினால் நொடிந்து போயிருக்கும் ஜவுளித் தொழி லைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வில்லை.

அதேபோல் சிறு, குறுத் தொழில்களுக்கு அடிப்படையான மூலப்பொருள்களாக உள்ள இரும்பு, பித்தளை, அலுமினியம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இந்த தொழில்கள் நலிவடைந்துள்ளன. ஜவுளித்  துறையினர், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரா மனை சந்தித்து கோரிக்கை விடுத்தபோது இந்த பிரச்சனையில் தலையிட முடியாது என்று கை விரித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சனையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி யிருக்கிறது. வரக்கூடிய காலத்திலும் ஒன்றிய  அரசை வலியுறுத்துவோம். வட இந்தியாவில் கோதுமை கொள்முத லை ஒன்றிய அரசு கைவிட்டதால் மூன்று  மடங்கு விலை உயர்ந்து பொது மக்கள்  போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. யார் பாதிக்கப்பட்டாலும், என்ன  அழிந்தாலும் பரவாயில்லை கார்ப்பரேட்டு களுக்கு சேவை செய்வதுதான் தங்கள் ஒரே கடமை என்று ஒன்றிய அரசு செயல்பட்டு வரு கிறது. இதை எதிர்த்து அனைவரும் ஒன்று பட்டு போராட வேண்டிய நிலை உள்ளது.

நீலகிரி பிரிவு 17 நிலப் பிரச்சனை

நீலகிரி மாவட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக நீடிக்கும் பிரிவு 17 நிலப்பிரச்ச னை காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டு இருளில் தவிக்கும் நிலை உள்ளது. அந்த குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்க வேண்டும் என்று எங்கள் கட்சி தலைவர்கள் நீலகிரியில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். பிரிவு 17 பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளனர். உடனடி யாக உயர்மட்டக் குழு அமைத்து பிரிவு 17 நிலப்பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண்போம் என்று முதல்வர் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டத் தக்கது. உடனடியாக அந்த மக்களுக்கு நிலப்பட்டா வழங்கி நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

பெண்கள் மீது அதிகரிக்கும் வன்முறை

பெண்கள் மீதான பாலியல் கொடுமை, குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள்  அதிகரித்து மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அளவுக்கு அதிகமாக உள்ளது என ஆய்வறிக்கை கூறியுள்ளது. தமிழக அரசு இதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் குடும்ப வன்முறை சட்டத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியும் இப்பிரச்ச னையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு அநீதி இழைத்து விட்டு சமத்துவம், சமூக நீதி பற்றி மேடைகளில் பேசுவது அர்த்தமற்றதாக இருக்கும். பெருத்த அவமானம் அதேபோல் பட்டியலின மக்கள்  தொடர்ந்து கொடுமைகளை அனுபவிக் கிறார்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் இறந்தவரை புதைப்பதற்கு சுடுகாட்டில் இடம் கிடைக்கவில்லை. சுடுகாடு கிடையாது, பாதை கிடையாது, ஆற்றில் கடந்து தலையில் வைத்து தூக்கிச் செல்ல  வேண்டிய மோசமான நிலை உள்ளது.  இறந்த பிறகு கூட பட்டியலின மக்க ளுக்கு சுடுகாட்டில் இடம் இல்லை என்பது இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் உரிமை இல்லை என்பது பெருத்த அவமானம். ஆணவப் படுகொலை தொடர்கிறது. ஒவ்வொரு கிராமத்தி லும் ஏதோ விதத்தில் இது போன்ற தாக்குதல்கள், அவமானப் படுத்துவது, கொச்சைப்படுத்துவது என தொடர்ந்து நடந்து வருகிறது.  பெருந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இதற்கு எதிராக  சிறப்பு மாநாட்டை நடத்துகிறது.  இதன் மூலம் குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் இருக்கும் பட்டியலின மக்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கக்கூடிய நட வடிக்கையை, அதற்கான இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்த இருக்கிறது

செஸ்வரியை வாபஸ் வாங்காதது ஏன்?

பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் சற்று குறைத்திருக்கிறார். அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கொதிப்பான நிலை அவரை அச்சுறுத்தி இருக்கும் என நினைக்கிறோம். வரும் 25 முதல் 31 வரை இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலையின்மை பிரச்ச னை குறித்து இந்தியா முழுவதும் மிகப்பெரிய இயக்கம் நடத்த தீர்மானித்திருக்கிறோம்.  பெட்ரோல், டீசல் கலால் வரியை குறைத்திருக்கிறார். இப்போது குறைக்க முடியும் என்றால், ஏன் விலையை ஏற்றினீர்கள். ஏற்றாமலே இருந்திருக்கலாமே, தற்போது விலையைக் குறைத்ததை மிகப்பெரும் சாதனையாக அண்ணா மலை சொல்கிறார். இதில் என்ன பெரிய சாதனை இருக்கிறது? கலால் வரியை குறைத்த மோடி அரசு, ஏன் செஸ் வரியை வாபஸ் வாங்க மறுக்கிறது. மாநில, மத்திய அரசுகள் பகிர்ந்து கொள்ளும் கலால் வரியை குறைக்கும் நீங்கள் மத்திய அரசு ஏகமாக அனுபவிக்கும் செஸ் வரியை குறைக்காதது ஏன்? அதை குறைக்க வேண்டும்.

பழமைவாத பாஜக

தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேசம் இன்று நடத்துவது நல்ல நிகழ்வல்ல. மனிதனை மனிதன் தலை யில் வைத்து பல்லக்கு தூக்குவது ஆதி கால அடிமை சமுதாயத்தின் அடையாளம். எத்தனையோ வசதி வாய்ப்புகள் வந்திருக்கும் நவீன காலத்தில் பல்லக்குத் தூக்குவதை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால் பாஜக தலைவர், ஏதோ புனித காரியம் போல எல்லாரும் வாருங் கள், பல்லக்கு தூக்குவோம் என தமிழக மக்களை அழைக்கிறார். எவ்வளவு பெரிய அவமானம், கேவலம். திருப்பனந்தாள், திருவாடுதுறை ஆதினங்களில், சங்கர மடத்தில், குன்றக்குடி ஆதினத்தில், ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில் இந்த பல்லக்கு நடை முறை கைவிடப்பட்டிருக்கிறது.  எல்லா இடங்களிலும் கைவிடப்பட்ட பல்லக்கு நிகழ்ச்சி, இப்போது மீண்டும் தூக்குவது, பாஜக எப்படி பழமைவாதம், மூடப் பழக்கத்தை மக்கள் மத்தியில் வலி யுறுத்தக்கூடியதாக உள்ளது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. பகுத்தறிவுக்கும், சமூகநீதிக்கும் சமூக சிந்தனைக்கும் வலுவான தளம் இருக்கக்கூடிய தமிழகத்தில் இதற்கு இடமளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கே.பால கிருஷ்ணன் கூறினார். இந்த பேட்டியின்போது கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

;