states

பிராமணரல்லாத அர்ச்சகர்களின் நியமனங்கள் ரத்து: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யவேண்டும்

மதுரை, மார்ச் 22- திருச்சி குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணி செய்து கொண்டிருந்த பிரபு, ஜெயபாலன் ஆகிய பிராமணரல்லாத அர்ச்சகர்களின் நியமனங்களை பறித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய கோரி யா.ஒத்தக்கடையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அதனையொட்டி  காலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ். கே. மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;  திருச்சி குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணி செய்து கொண்டிருந்த பிரபு, ஜெயபாலன் ஆகிய பிராமணர் அல்லாத அர்ச்சகர்களின் நியமனங்களை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த சூழலில்  தற்போது அனைத்து சாதியினர் அர்ச்சகராக  ஆவதை மறுக்கும் விதமாக நீதிபதியின் உத்தரவு அமைந்திருப்பது அரசியல் அமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு முரணாகவும் சனாதனத்துக்கு ஆதரவாகவும் உள்ளது.  

எனவே சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்து சட்டத்தை அமலாக்க  வேண்டும்.  குறிப்பாக  நமது பக்கத்து மாநிலமான  கேரளத்தில் இடது முன்னணியின் அரசின் சார்பில் கடந்த 2017இல்   அமைச்சராக இருந்த கடனபள்ளி சுரேந்திரன்,  திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட  1200 கோவில்களில் 6 பட்டியல் இன சமூகத்தினர் உட்பட 32 பேரை அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.  உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கேரளத்தில் அர்ச்சகர் நியமனம் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்புச் சாசனங்கள்  ஏற்றுக் கொண்டுள்ள மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் முழுமையாக அமல்படுத்தப்படுவதும் மற்றொரு மாநிலத்தில் ஏற்றுக்கொள்ள மறுப்பதும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக உள்ளது.  எனவே தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவை நிலைநிறுத்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டும். தமிழக அரசு மேல்முறையீடு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு செல்லாவிட்டால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மேல் முறையீடு செய்யப்படும்.  மேலும் அரசு சார்பில் தொடரப்படும் மேல் முறையீட்டு மனுவுடன்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தன்னை இணைத்துக் கொள்ளும் என்றார்.  இந்த  சந்திப்பின் போது  முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்  செ.முத்துராணி, புறநகர் மாவட்டத் தலைவர் செ.ஆஞ்சி ஆகியோர் உடன் இருந்தனர்.

;