“சாவர்க்கரும் பிஜேபி யும்”, “பாய்வதற்கு காத்திருக்கும் பாசிசம்” ஆகிய இரண்டு புத்தகங்களும் ஜூன் 18 அன்று நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு மேடைக் கலைவாணர் தோழர் என்.நன்மாறன் நினைவரங்க சிறப்பு கருத்தரங்கத்தில் வெளியிடப்பட்டன.
இரண்டு புத்தகங்களையும் மார்க்சிய ஆளுமைகள் பேரா.அருணன் வெளியிட தோழர் எஸ்.ஏ.பெருமாள் பெற்றுக்கொண்டார்.
வரலாற்றை திருத்தி எழுதும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் சாவர்க்கரின் அவப்புகழ் வரலாற்றையும் மாற்றி அமைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காலத்தில் ‘‘சாவர்க்கரும் பிஜேபியும்’’ புத்தகம் வெளிவந்துள்ளது. 91 வயது இளைஞர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர். சட்ட வல்லுனர். பத்திரிகைகளின் கட்டுரையாளர் ஏ.ஜி.நூரணி ஃப்ரண்ட்லைன் இதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. 1946 இல் இருந்து நாளிதழ்கள், சஞ்சிகைகள், பருவ இதழ்கள் அனைத்திலும் இருந்து முக்கிய ஆவணங்களை சேகரித்து பாதுகாத்து வரும் நடமாடும் ஆவணக் காப்பகம் ஏ.ஜி.நூரணி. புத்தகங்கள் சூழ்ந்த உலகில் எளிமையான வாழ்க்கை வாழும் ஏ.ஜி.நூரணி மறுக்கமுடியாத சான்றுகளோடு எழுதுபவர். ஆர்எஸ்எஸ், இந்திய அரசியல், இந்திய அரசியலமைப்புச் சட்டம், உலக அரசியல் சட்ட அமைப்புகள் பற்றி தேர்ந்த ஞானத்தோடு எழுதுபவர். “சாவர்க்கரும் பிஜேபியும்” ஆங்கில கட்டுரையை ம.கதிரேசன் தமிழாக்கம் செய்துள்ளார்.
“பாய்வதற்கு காத்திருக்கும் பாசிசம்” என்ற புத்தகத்தில் வரலாறு, அரசியல் சட்டம், போராட்டம் பற்றி காத்திரமாக பேசும் ஆளுமைகள் பேரா.அபூர்வானந்த், அபிஜித் சென் குப்தா, மரி மார்க்கேல்தீகேகாரா ஆகியோரின் ஆங்கிலக் கட்டுரைகளை பேரா.விஜயகுமார் தமிழாக்கம் செய்துள்ளார். இந்த இரண்டு புத்தகங்களையும், தமிழ்நாட்டு மக்கள் அறிவொளி பெறும் விதத்தில் தேடித்தேடி புத்தகங்களை உருவாக்கும் வாசல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வாசல் இரத்தின விஜயன் அருமையாக புத்தகங்களை கொண்டு வருவதில் காட்டும் ஈடுபாடும் உழைப்பும் பிரமிக்கத்தக்கது. மோடியின் அரசு தாள்களின் விலைகளை தாறுமாறாக ஏற்றிய பின்னர் பதிப்பகம் நடத்துவதே சிரமமாகி உள்ள சூழ்நிலையில் மேற்படி இரண்டு புத்தகங்களையும் பாசிச எதிர்ப்பாளர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். சிறுநூல்கள் தான்! ஆனால் பெரிய விசயங்களை உள்ளடக்கிய புத்தகங்கள். வாங்கிப் படிக்க வேண்டும். பரப்ப வேண்டும். முடிந்தால் விற்பனையும் செய்ய வேண்டும். இது ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் பாசிச செயல்பாடுகளுக்கு எதிரான- தேச பக்தியின் வெளிப்பாடு.
வாசல் பதிப்பகம்
40/D 3, முதல் தெரு, வசந்த நகர், மதுரை -3. கைப்பேசி- 98 421 02 133
மின்னஞ்சல்-vasalviji@gmail.com