states

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர்  ஹர்திக் படேல் கட்சியிலிருந்து விலகல்


=

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர்  ஹர்திக் படேல் கட்சியிலிருந்து விலகல்

குஜராத், மே 18-

குஜராத் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹர்திக் படேல் புதனன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகின்றது. வருகின்ற தேர்தலில், குஜராத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் செய்து வருகின்றது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த செயல் தலைவர் ஹர்திக் படேல், கடந்த வாரம் டிவிட்டர் சுய குறிப்பிலிருந்து காங்கிரஸ் கட்சியை நீக்கினார்.
இதைத்தொடர்ந்து, புதனன்று கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை தேர்தல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க படேல் சமூகத்தினரின் ஆதரவு தேவைப்படுகிறது. 
இந்த நிலையில், படேல் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவரான ஹர்திக் படேல் விலகியுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


தில்லியில் ரோகிணி 

நீதிமன்றத்தில் தீ விபத்து  

புதுதில்லி, மே 18-

தில்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறைக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுதொடர்பாக தில்லி தீயணைப்பு சேவை இயக்குநர் அதுல் கர்க் கூறுகையில், ‘‘ரோகிணி நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள நீதிமன்ற அறை 210-ல் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறைக்கு புதனன்று அழைப்பு வந்தது. நீதிபதிகள் அறைக்கு அருகில் உள்ள ஏசியில் தீப்பிடித்துள்ளது’’ என்று கூறினார். 


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் கப்பல்கள்: 
ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார்
மும்பை, மே 18-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூரத், உதய்கிரி போர் கப்பல்கள் கடற்படைக்கு அர்ப்பணிக்கும் விழா மும்பை மஜ்காவ் டாக்கில் நடைபெற்றது. 
விழாவில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு 2 போர்க்கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த போர்க்கப்பல்கள் மஜ்காவ் டாக் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.
 

;