states

சிதறாமல் குறி தவறாமல்

என் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) இன்று அளித்த  தீர்ப்பு, எனது 5 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ‘‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’’ என்ற நான்கு வார்த்தைகளை டாக்டர் தமிழிசை சௌந்தர ராஜன் அவர்களின் செவிகளில் கேட்கும் அளவுக்கு ஒருமுறை தான் கூறினேன். அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள்—கட்சி ஆட்களை என் மேல் ஏவியது, நடந்ததை தவறாக சித்தரித்தது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி என்னை மிரட்டியது மற்றும் சட்டரீதியாக துன்புறுத்தியது ஆகியவை அனைவரும் அறிந்ததே. இது ஒரு கடினமான போராட்டமாக இருந்தது.  நான் பேசியது சர்ச்சையாக்கப்பட்டவுடன் எனது ஒரே நோக்கம், அந்த நான்கு வார்த்தைகள் கவனம் சிதறாமல் குறி தவறாமல் நான்கு திசைகளிலும் எதிரொலிக்க வேண்டும் என்பதே.. என்னுடைய அந்த மௌனத்தை நிரப்பி, என் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி,

எனது உரிமைகளுக்காக குரல் கொடுத்த மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் உட்பட அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பெரிய அளவில் அரசியல் நெருக்கடி மற்றும் துன்புறுத்தல்களிடம் இருந்து நான் தப்பிக்க மிக முக்கிய காரணம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொது வாழ்வில் உள்ள முற்போக்குவாதிகள், மற்றும் பொது மக்கள் அனைவரின் துரிதமான அளவுக்கதிகமான ஆதரவே. நன்றி! நன்றி!  இல்லாவிடில், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் காவல்துறையினரின் அடக்குமுறை நடவடிக்கைகளால் நான் காணாமல் போயிருப்பேன். இறுதியாக, நாம் அனைவரும் அரசியல் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நிற்க வேண்டும் என்றும் நான் மனதார விரும்புகிறேன்.

சோபியா