states

கருத்தை அழித்திடனும் - (கோவி.பால.முருகு)

சீற்றம் வரவேண்டும் - இனியிங்குக்
    சீற்றம் வரவேண்டும் - கொடுங்
கூற்றம் தொலைத்திடவே-வெறி
    கேட்டை அழித்திடவே - வரும்
மாற்றம் மிகுந்திடனும் - மத
    மாயைக் குதித்திடுமேல் - அதன்
காற்றை அடக்கிடனும்-அதன்
    கயமை ஒழித்திடனும்!

நாடு நலம்பெறனும் - இந்திய
    நாடு நலம்பெறனும் - இங்கு
கேடு நிறைந்ததுவாய் - பாதகக்
    கீழ்மை உடையதுவாய் - நாட்டில்
கூடும் அழிவினையே - மனம்
    கொண்டு ஒழித்திடனும் - எங்கும்
வாடும் பயிரெனவே - காணும்
    வாட்டம் ஒழித்திடனும்!

வேலை பெறவேண்டும் - இளைஞர்
    வேலை பெறவேண்டும் - நாட்டில்
ஆலை நிறைந்திடவே - உயர்
    ஆக்கம் நிலைத்திடனும்-செல்வச்
சோலை மலர்ந்திடனும்-வறுமைச்
    சோர்ந்து ஒழிந்திடனும்-செங்
கோலை உயர்ந்திடனும்!

உழவு செழித்திடனும் - நாட்டில்
    உணவு குவிந்திடனும் - இயற்கை
அழகு மலர்ந்திடனும் - நீர்
    ஆற்றல் பெருகிடனும் - வான் 
மழையே பொழிந்திடனும் - மண்
    மகிழ்ச்சியில் திளைத்திடனும் - கடல்
உழைப்பில் ஓங்கிடனும்-மீனவர்
     உவகை கொண்டிடனும் !

குறைகள் கலைந்திடனும் - நாளும்
    குவலயம் செழித்திடனும் - நாட்டில்
திறமை மிகுந்திடனும் - கல்வித்
    திறத்தில் உயர்ந்திடனும்-மனித
உறவு மலர்ந்திடனும்-நேய 
    ஊற்றுச் சுரந்திடனும்-தடுக்கும்
கரவு குறிக்கிடுமேல்-அதன்
    கருத்தை  அழித்திடனும்!