states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் ஏமாற்று

தேர்தல் நிதியை ரொக்கமாக அளிப்பதற்கு மாற்றாகவும், அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை (Electoral Bonds Scheme) கொண்டு வருவதாக மோடி அரசு கூறியது. இதனை 2017 பட்ஜெட்டில் அறிவித்து, 2018 ஜனவரி 2 முதல் நடைமுறைக்கும் கொண்டு வந்தது. இதன்படி, ‘ஸ்டேட் பாங்க் இந்தியா’ (State Bank of India - SBI) வங்கியின் சார்பில் ரூ. 1,000, ரூ. 10 ஆயிரம், ரூ. 1 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. 1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்படும். ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் - மாதத்திற்கு 10 நாட்கள் மட்டும் ‘ஸ்டேட் பாங்க் இந்தியா’ வங்கியின் குறிப்பிட்ட வங்கிக் கிளைகளில் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பொதுத் தேர்தல் காலத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள கூடுதலாக 30 நாட்கள் ஒன்றிய அரசால் அனுமதி வழங்கப்படும். 

6 ஆண்டுகளில் ரூ. 6,564 கோடியை வாரிச் சுருட்டிய பாஜக

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை பாஜக கொண்டுவந்ததே தங்களின் சுய ஆதாயத்திற்காகத்தான். ஏனெனில் கடந்த 6 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும்தொகையை பெற்றது பாஜகதான். 6 ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலமாக அக்கட்சி பெற்றுள்ளது. 2018-ஆம் ஆண்டில் ரூ. 210 கோடி, 2019-ஆம் ஆண்டில் (தேர்தல் நடைபெற்ற வருடம்) ரூ. 1,450 கோடி, 2020-ஆம் ஆண்டில் ரூ. 2,555 கோடி, 2021-ஆம் ஆண்டில் ரூ. 22.38 கோடி, 2022-ஆம் ஆண்டில் ரூ. 1,033 கோடி, கடந்த 2023-ஆம் ஆண்டில் ரூ. 1,294 கோடி என 2018 முதல் 2023 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ. 6 ஆயிரத்து 564 கோடி ரூபாயை அநாமதேய தேர்தல் பத்திரம் பாஜக மூலம் பெற்றுள்ளது.

பணமசோதாவாக மாற்றிய மோடி அரசின் தந்திரம்

நன்கொடைப் பத்திரங்கள் மூலம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அரசியல் கட்சிகள் பெறலாம்; வெளிநாட்டு நன்கொடைகளும் பெறலாம் எனக் கூறிய நரேந்திர மோடி அரசு, தங்களின் இந்தத் திட்டத்தைப் பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான சட்டத் திருத்தங்களை பண மசோதாவாக கொண்டுவந்து, நாடாளுமன்றத்தில் எந்தவொரு விவாதமும் நடத்தாமலேயே நிறைவேற்றிக் கொண்டது. இதற்கு அப்போதே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த எதிர்ப்புக்களை புறந்தள்ளிய மோடி அரசு, எதேச்சதிகாரமான முறையில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சிபிஎம்

ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது; ஜனநாயகத்திற்கு எதிரானது; கருப்புப் பணம், கள்ளப்பணத்தை ஊக்குவிக்கக் கூடியது; வெளிப்படைத் தன்மை மற்றும் உண்மையை அறிந்துகொள்ளும் மக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அரசியல் கட்சி என்ற அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது என்ற நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR), காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலுமாக மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாக்கூரும் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

6 ஆண்டுகளாக  நடைபெற்ற வழக்கு

தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 6 ஆண்டுகளாக விசாரித்து வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷன், ஷதன் பராசத், நிஜாம் பாஷா, விஜய் ஹன்சாரியா, சஞ்சய் ஹெக்டே ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர். ஒன்றிய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர். இறுதியாக கடந்த 2023 நவம்பரில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.பி. பர்திவாலா, பி.ஆர். கவாய், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தொடர்ச்சியாக 3 நாட்கள் விசாரித்தது.

சட்டவிதிகளை மீறவில்லை என மோடி அரசு சமாளிப்பு

வழக்கு விசாரணையில், வெளிப்படையற்ற தேர்தல் பத்திரங்கள் மூலம் இதுவரையில் அரசியல் கட்சிகளுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி சென்றுள்ளது. இதில் இரண்டில் மூன்று பங்கு நிதியை ஒரே கட்சி (ஆளும் பாஜக) பெற்றுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், தேர்தல் பத்திரம் திட்டத்தில் எந்த சட்டவிதிகளும் மீறப்படவில்லை; யாருடைய உரிமைகளும் மீறப்படவில்லை; என ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.