மதுரை, ஜூன் 17- நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 5-ஆம் தேதி சிஐடியு தலைமையில் நலவாரிய அலுவலகங்கள் முன்பு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்குமாறு சிஐடியு அறைகூவல் விடுத்துள்ளது. நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும். பணியிடங்களில் மற்றும் எங்குவிபத்து மரணம் நிகழ்ந்தாலும் நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இயற்கை மரண நிவாரண நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தவேண்டும். ஈமச்சடங்கு நிதியை ரூ.25,000 ஆக உயர்த்த வேண்டும். அனைத்து முறைசாரா தொழிலாளர்க்கும் சமூக பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு உரிய நிதியை தமிழக அரசும் ஒதுக்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்க்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
நிலுவையிலுள்ள ஆயிரக்கணக்கான மனுக்களை உடனடியாக பரிசீலித்து நலத்திட்டப் பணப்பயன்களை தாமதமின்றி வழங்கவேண்டும். ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவைத்தொகையுடன் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் பெறுவதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவேண்டும். வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக வந்து நல வாரிய மனுக்களை சமர்ப்பிக்க அனுமதிக்கவேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 5-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நலவரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சிஐடியு மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் வியாழனன்று மாநிலத் துணைத் தலைவர் சிங்காரவேலு தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில உதவிப் பொதுச் செயலாளர்கள் எஸ்.கண்ணன், கே. திருச்செல்வன், வி.குமார், மாநில துணைத் தலைவர் இரா. தெய்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.