மைசூருவில் தசரா விழாவை தொடங்கி வைக்க இஸ்லாமிய எழுத்தாளர் பானு முஸ்தாக் அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக முன்னாள் எம்.பி பிரதாப் சிம்ஹா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கர்நாடக மாநிலம் மைசூருவில், தசரா விழாவை தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரும், சமூக நல ஆர்வலருமான பானு முஷ்டாக் அம்மாநில அரசால் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு, இஸ்லாமியர் ஒருவர், இந்து விழாவில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைப்பது ஏற்புடையதல்ல என இந்துத்துவ கும்பல் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், தசரா விழாவை தொடங்கி வைக்க பானு முஸ்தாக் அழைக்கப்பட்டதை அரசு திரும்பப் பெற வேண்டும் என பாஜக முன்னாள் எம்.பி பிரதாப் சிம்ஹா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி மனுத் தக்கத்ல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையின்படி, அரசின் நிகழ்ச்சி நிரலை பிறர் தீர்மானிக்க முடியாது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசின் நிகழ்வில் பங்கேற்கும் உரிமை உள்ளது. தசரா விழாவில் பானு முஷ்தாக் பங்கேற்பது அரசியல் சாசனத்தை மீறும் செயல் அல்ல. பானு முஷ்தாக் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்பதை ஏற்க முடியாது என தெரிவித்து பாஜக முன்னாள் எம்.பி-யின் மனுவை தள்ளுபடி செய்தது.
