states

img

பாஜகவின் இரட்டை நிலைபாடு: கர்நாடகத்தில் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் இலவசம்:பாஜக தேர்தல் வாக்குறுதி

கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தில் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளை காணொளி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார்.அப்போது, இலவசங்களுக்கு எதிராக கொந்தளித்து பேசினார். வரி செலுத்துவோர் பலரும் எனக்கு கடிதம் எழுதி வருகிறார்கள். தங்கள் வரி பணம் தேர்தல் இலவசங்களின் உபயோகத்திற்காக செலவிடப்படும் போது வேதனை அடைகிறார்கள். இலவசங்கள் கலாச்சாரத்தில் இருந்து நாட்டை விடுவிக்க என்று வீரவசனமாக பேசினார்.

ஆனால், குஜராத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு பாஜக இலவச திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.அதில், குஜராத்தில் வயதான பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அறிமுகம் செய்யப்படும். மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டரும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக 2 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்பன உள்பட பல்வேறு அறிவிப்புகள் அத்தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

அப்போதே, பாஜகவினர் மீது பெரிய அளவிற்கு விமர்சனங்கள் எழுந்தது. இலவசங்களால் நாடு சீரழிந்துவிட்டது என பேசிவிட்டு அதற்கு நேர்மாறாக இலவசங்களை அறிவிக்கும் பாஜகவினரின் இரட்டை  நிலைப்பாட்டை எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடுமையாக விமர்சித்தனர்.

அந்த வகையில் தற்போது கர்நாடாகவில் மே-10 அன்று நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கையை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.

அதில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி மற்றும் யுகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 10 லட்சம் வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, எதிர்கட்சியினரும் , பொதுமக்களும் பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மோடி செல்லும் இடங்களில் எல்லாம் இலவசத்திற்கு எதிராக பேசிவிட்டு தற்போது பல மாநில தேர்தல்களில் இலவச திட்டங்களை அறிவிக்கும் பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொண்டு வருகின்றனர்.