மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினரும், ஒடிசா மாநிலக்குழுவின் செயலாளருமான தோழர் சிவாஜி பட்நாயக் மே 23 அன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. அவரின் இறப்புக்கு அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
சுதந்திரப் போராளிகளின் குடும்பத்தில் பிறந்த தோழர் சிவாஜி பட்நாயக் மாணவர் இயக்கத்திலேயே தன்னை இணைத்துக்கொண்டு, இளம் வயதிலேயே ஒன்றாக இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, வெகு விரைவிலேயே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி 1964இல் பிளவுண்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதில் முக்கிய பங்காற்றினார். ஒடிசா மாநிலக்குழுவின் செயலாளராக 1972 முதல் 1990 வரை செயல்பட்டார். 1978இல் நடைபெற்ற கட்சியின் பத்தாவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு,1989 வரை அதில் தொடர்ந்தார்.
தோழர் சிவாஜி பட்நாயக் மாநிலத்தின் விவசாய இயக்கத்திலும், தொழிற்சங்க இயக்கத்திலும் செயல்பட்டார். ஒடிசாவில் சிஐடியு அமைக்கப்பட்டபோது அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்களவைக்கு புவனேஸ்வர் தொகுதியிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய நேர்மைக்காக மிகவும் விரிவான அளவில் மதிக்கப்பட்டார்.
அரசியல் தலைமைக்குழு தோழர் சிவாஜி பட்நாயக்கை இழந்து வாடும் அவர் தம் மனைவி பிரதிபா, மூன்று மகன்கள், மகள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த இதரர்களுக்கும், தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.