கொல்கத்தா:
மேற்குவங்க மாநில பாஜக இளைஞரணி பெண் தலைவர் பமீலா கோஸ்வாமி, ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை காரில் கடத்த முயன்று, கையும் களவுமாக சிக்கியுஉள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக இளைஞர் அணி பெண் தலைவராக இருப்பவர் பமீலா கோஸ்வாமி. இவர் தனது காரில் போதைப்பொருள் கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தெற்கு கொல்கத்தாவின் நியூஅலிபூரில் காரை சோதனை செய்தபோது ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் கோகைன் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காரில் இருந்த பமீலா கோஸ்வாமி (23), அவரது நண்பர் பிரபீர் குமார் டே (38), சோம்நாத் சாட்டர்ஜி (26) ஆகியோரை கைது செய்த போலீசார், கோகைனையும் பறிமுதல் செய்தனர்.
பாஜக தலைவர் பமீலா கோஸ்வாமி உள்ளிட்டோர் மீது என்.டி.பி.எஸ். சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியதுடன், தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து வந்த பமீலா கோஸ்வாமி, கடந்த 2019-இல் பாஜக-வில் இணைந்தார். அப்போது முதல், மேற்குவங்கத்தில் பாஜக மேற்கொள்ளும் பேரணிகளின் படங்களை அவர் தொடர்ந்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்தார். இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக, ஹாலிவுட் பாப் பாடகி ரியானா டுவிட்டரில் பதிவிட்டபோது, அவரை கடுமையாக விமர்சித்தும் பமீலா கோஸ்வாமி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.