கார்டோம், ஜூலை 5- ஆப்பிரிக்க நாடான சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையால் அந்நாட்டு மக்கள் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதியன்று தொடங்கிய இந்தப் போரால் இதுவரையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 22 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் 6 லட்சத்து 45 ஆயிரம் பேர் எல்லைகளைத் தாண்டி பல நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்றிருக்கிறார்கள். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு சில நாட்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டாலும், தற்போது மீண்டும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. குண்டுகள் வெடிக்கும் சத்தங்களே தங்களை உறக்கத்தில் இருந்து எழுப்பி விடுவதாக தலைநகர் கார்டோமில் வசிக்கும் மக்கள் கூறுகிறார்கள். தங்கள் பகுதிகளுக்கு மேல் போர் விமானங்கள் பறந்து கொண்டிருப்பது வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் நிவாரண நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. உதவியோடு இயங்கும் அமைப்புகள் கூறியுள்ளன. நோய்கள் பரவும் அபாயமும், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் நிலைமையும் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதிலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் நிலைமை படுமோசமாக இருக்கிறது என்றும் நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.