சென்னை, நவ. 7 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானம் அண்மையில் காலமானார். அவரது புகழஞ்சலிக் கூட்டத்தை புதனன்று (நவ.6) சென்னையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியது. இந்நிகழ்வில் உருவப் படத்தை திறந்து வைத்து, தோழர் யு.கே.சிவஞானம் மனைவியிடம் குடும்ப பாதுகாப்பு நிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வழங்கினார். அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், “கோவை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் தோழர் யு.கே.சிவஞானம் ஆற்றிய பங்களிப்புகள் ஈடுசெய்ய முடியாதவை. புதிதாக வரும் புத்தகங்களை தேடித்தேடி படிப்பதோடு, பிறருக்கு வாங்கிக் கொடுத்து படிக்க வைப்பார். களப்பணியோடு, கருத்தியல் ரீதியாக சிந்தித்து, விவாதிப்பவராக சிவஞானம் இருந்தார். அதனால்தான் அனைத்து இயக்கங்களோடும் அவரால் இணைந்து செயலாற்ற முடிந்தது. யு.கே.சிவஞானம் உயிரிழந்த அதே நாளில், சிவகங்கை மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் ஆர்.கே. தண்டியப்பனும் மறைந்தார். இருவருமே களப்போராளிகள். அவரும் 45 ஆண்டுகள் முழுநேர ஊழியராக பணியாற்றியவர். ஒரே நேரத்தில் இரண்டு களப்போராளிகளை மார்க்சிஸ்ட் கட்சி இழந்துள்ளது. இயற்கை உலகத்தில் இருந்து மறைந்தாலும், இதய உலகில் என்றென்றும் வாழ்வார்கள்” என்று கூறினார்.
உயிரோட்டமான தொடர்பு
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் குறிப்பிடுகையில், “அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து அமைப்புக்களோடும் தோழர் யு.கே.சிவஞானம் நல்லுறவு கொண்டிருந்தார். அவரைப் போன்றே பல்வேறு அமைப்புக்களோடும், நபர்களோடும் உயிரோட்டமான தொடர்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். தோழர் யு.கே.சிவஞானம் குறித்து ஒரு ஆவணத்தை உருவாக்குவோம்” என்றார். “கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னின்றது. இதனை அன்றைய அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பாராட்டிப்பேசினார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யு.கே.சிவஞானம். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முகமாக யு.கே.சிவஞானம் இருந்தார்” என்று அமைப்பின் சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன் கூறினார். நிகழ்விற்கு மாநிலத்தலைவர் த.செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் இ.மோகனா, துணைச்செயலாளர் பி.பி.பழனிச்சாமி, கோவை மாவட்டச் செயலாளர் இரா.ஆறுச்சாமி ஆகியோர் பேசினர்.