states

‘முரண்பாட்டை தீவிரமாக்கும் தனியார்மயம்’

தனியார்மயம் என்பது அரசு, மக்கள், தொழிலாளர்களுக்கிடையே முரண்பாட்டை தீவிரமாக்குகிறது என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன்  கூறினார். ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) நிர்வாகிகளின் கூட்டத்தில் பங்கேற்ற சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் பின்பற்றப்படும் தாராளமயக் கொள்கை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.  பஞ்சாலை, நூற்பாலை, பனியன், ஜவுளி போன்ற தொழில்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி சிறு, குறு, நடுத்தர தொழில்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. தாராளமயக் கொள்கையின் மிக முக்கியமான வெளிப்பாடு, தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைப்பது, பென்ஷன் உரிமைகளை நீக்குவது அல்லது குறைப்பது என்பதாகும். இதை உலகம் முழுவதும் அமலாக்கிட கார்ப்பரேட்டுகள் துடிக்கின்றனர்,

ரசுகள் அதற்கு துணை நிற்கின்றன என சவுந்தரராசன் குற்றம்சாட்டினார். இந்தியாவில் பாஜக கூட்டணி அரசு பல சட்டங்களைத் திருத்த முற்படுகிறது, ஆனால் தொழிற்சங்கங்கள் அவற்றைத் தடுப்பதாக சவுந்தரராசன் தெரிவித்தார். தற்போது தொழிலாளர்களின் நிரந்தர வேலை உரிமைகளைக் குறைத்து, குறைந்தபட்ச சம்பளத்தில் ‘கான்ட்ராக்ட்’, ‘கேசுவல்’ என்ற பெயரில் வேலை வாங்குவது என்ற புதிய உத்தியை கையாளத் தொடங்கியுள்ளனர் என்றார். சாம்சங் போராட்டத்தை விவரித்த சவுந்தரராசன், தொழிலாளர்களை சுரண்டுவதற்கும், வேலை பளுவை திணிப்பதற்கும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் சங்கத்தை அமைத்ததாகவும், அதனை ஒழிக்க வேண்டும் என்பதுதான் நிர்வாகத்தின் நிலைப்பாடு என்றும் கூறினார்.  தமிழக அரசு போக்குவரத்தை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக  விமர்சித்த சவுந்தரராசன், அதை எதிர்ப்போம் என்றார். மேலும், அரசு நிறுவனங்களில் தனியார்மய நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் கண்டித்தார்.  தொழிலாளர் உரிமைகளை மீறும் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே முரண்பாடு தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டின் பெருமை  முன்னதாக தமிழ்நாட்டு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) பொது செயலாளர் ஆறுமுக நயினார் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் தமிழகத்தின் பெருமையாக விளங்குகின்றன என குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 17,662 கிராமங்களில் 17,332 கிராமங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சேவை வழங்கி வருகின்றன. இந்தியாவிலேயே இதுபோன்ற விரிந்த போக்குவரத்து வசதி வேறு எங்கும் கிடையாது. தினமும் 1.75 கோடி பயணிகள் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததால், கடந்த பல ஆண்டுகளாக 35,000 கோடி ரூபாய் கடனாக சுமை ஏற்பட்டுள்ளதாக ஆறுமுக நயினார் தெரிவித்தார்.  இதனால், தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை நடக்காமல் உள்ளது. மேலும், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதோடு, காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இருப்பதும் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக சம்மேளனத் தலைவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், போக்குவரத்துக் கழகங்களின் வளர்ச்சிக்கு அரசாங்கம் உடனடி நிதி ஒதுக்கீடு செய்வதோடு, தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.