21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,நவ.13- தமிழகத்தில் வியாழக்கிழமை யன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. “வடதமிழக கடலோரப்பகுதி களை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வியாழக்கிழமை (நவ.14) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சி புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்கள், புதுச் சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்க! தமுஎகச கோரிக்கை
சென்னை,நவ.13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு: தமிழின் தனித்துவமிக்க ஆய்வாளரும் எழுத்தாளருமான பேரா ராஜ் கெளதமன் அவர்கள் புதனன்று அதிகாலையில் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு தமுஎகச மிகுந்த துயர் கொள்கிறது. விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி என்ற சிற்றூரில் 6.3.1949 ஆம் ஆண்டு பிறந்த ராஜ் கௌதமனின் இயற்பெயர் புஷ்பராஜ். விலங்கியல் இளங்கலைப்பட்டமும் தமிழ் மற்றும் சமூகவியலில் முதுகலைப்பட்டங்களும் பெற்றவர். “அ.மாதவையாவின் தமிழ் நாவல்கள்- ஓர் ஆழ்நிலைப்பார்வை” என்கிற இவரது முனைவர் பட்ட ஆய்வேடு, ஆய்வுப்புலத்தில் புதிய அணுகுமுறையைக் கொண்டு வந்தது. பழந்தமிழ் இலக்கியத்தில் தோய்ந்தறிந்த உண்மைகளையும் சமகால நடப்புகளை உற்றுநோக்கும் கூர்ந்த மதியும் கொண்டவரான ராஜ் கெளதமன் தமிழ்ப் பண்பாடு, கலை இலக்கியம், வரலாறு, அரசியல் போக்குகள், சமூக அசைவியக்கம் முதலானவற்றை மார்க்சிய ஆய்வுமுறையியலில் ஆழங்கால்பட்ட தலித் பார்வையில் விளக்கியும் விமர்சித்தும் தொடர்ந்து எழுதியவர். அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம் ஆகியவற்றில் அவருக்கிருந்த பற்றினால் அவற்றை ஒன்றுக்கொன்று முரணாக நிறுத்தாமல் சமூகத்தைப் புரிந்துகொள்ளவும் அநீதிகளைக் களையவும் அவற்றிலிருக்கும் பொதுமைகளை முன்னிறுத்தியவர். தமுஎகச உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர் ராஜ் கெளதமன். அவரது மறைவுக்கு தமுஎகச செம்மார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார், உறவினர்கள், தோழர்கள் அனைவரது துயரிலும் தமுஎகச பங்கெடுக்கிறது. உயிர்ப்பொளிச் சுடரும் அறிவாளுமையான ராஜ் கெளதமன் அவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: அயோத்திதாசர் ஆய்வுகள், ஆரம்பக்கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும், தலித்திய விமர்சனக் கட்டுரைகள், தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் உள்ளிட்டு 20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் ராஜ்கௌதமன் மறைவிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிடுக!
முதலமைச்சருக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கடிதம்
சென்னை, நவ. 13 - தனியார் பேருந்துகளை வாட கைக்கு எடுத்து இயக்கும் நடவடிக்கை யை கைவிட வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று (நவ.12) பல்லவன் இல்லத்தில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதனையடுத்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட 9 சங்கங்களின் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் முதலமை ச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், திருவிழா, பண்டிகை நாட் களில் தனியார் பேருந்துகளை வாட கைக்கு எடுத்து இயக்குவது போக்கு வரத்துக் கழகங்களை கடுமையாக பாதிக்கும். எனவே எதிர்காலத்தில் இதனை தவிர்க்க வேண்டும். 25 ஆயிரம் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஒப்பந்த அடிப்படை யில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். கடந்த 3 ஒப்பந்தங்களும் உரிய காலத்தில் பேசி முடிக்கப்படவில்லை. காலதாமதமாக போடப்படும் ஒப்பந்த த்திற்கு உரிய நிலுவைத்தொகையும் முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது ஒப்பந்தம் நிறைவு பெற்று ஓராண்டுக்கு மேலாகிறது. எனவே ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடித்து நிலுவை தொகைகள் வழங்க வேண்டும். ஓய்வு கால பணப்பலன்களை ஓய்வுபெறும்போதே வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 19 மாதத்திற்கான ஓய்வு கால பணப் பலனை விரைந்து வழங்க வேண்டும். வாரிசு வேலைக்கு காத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் போக்குவரத்துக்கழ கத்தின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும். பேருந்து எண்ணிக்கை இயக்க வரைமுறை, பணியாளர்கள் எண்ணிக்கை வரையறை செய்தும், பணியிடங்களை ஒழித்து, வெளி முகமை மூலம் பணி மேற்கொள்வது என 31.10.2018-ம் நாளிட்ட அரசாணை கள் 321 முதல் 328 வரையிலான வற்றை ரத்து செய்ய வேண்டும். இவற்றின் மீது விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.