tamilnadu

img

கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு சிபிஎம் இரங்கல்!

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு சிபிஎம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுபோன்ற விபத்துகளை தடுத்திடவும் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில், ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் இன்று காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை சென்று கொண்டிருந்த ரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வந்த அண்ணாதுரை என்பவரும்  மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த கோரவிபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
செம்மங்குப்பத்தில் கேட் கீப்பர் தூங்கியதன் காரணமாகவே இந்த கோர விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விபத்து சம்பந்தமாக ரயில்வே நிர்வாகம் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றமிழைத்தோர் தண்டித்திட வேண்டும். படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவருக்கும் உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இந்த விபத்திற்கு ரயில்வே நிர்வாகம் முழுப்பொறுப்பு ஏற்றுக் கொண்டு உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும்  ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்ற காலந்தொட்டு ரயில் விபத்துக்கள் தொடர்கதையாகி வருகிறது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது, ரயில்வே துறையை முற்றிலும் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, உரிய நிதி ஒதுக்காதது, பாதுகாப்பு அம்சங்கள் மீது கவனம் செலுத்தாதது போன்றவை இதுபோன்ற விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. ஒன்றிய பாஜக அரசு உடனடியாக ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்கு உரிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.