திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் தனிப்படை காவலர்களால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் விரிவான விசாரணை முடித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐ-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணின் நகை திருடு போன விவகாரத்தில், கோவில் காவலராக பணியாற்றி வரும் அஜித் குமார் உள்ளிட்ட நான்கு பேரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். அஜித்தை தவிர மற்றவர்களை அனுப்பிவிட்ட போலீசார், அஜித்தை கோவில் வளாகத்தில் உள்ள மாட்டுக் கொட்டகை, தனியார் தோட்டம் என வெவ்வேறு இடங்களில் தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக தாக்கி சித்ரவதைக்கு உள்ளாக்கினர். இதில் அஜித் குமார் உயிரிழந்தார். உடற்கூராய்வு அறிக்கையில், அஜித் குமாரின் உடலில் 44 காயங்கள் இருந்ததாகவும், அவர் அடுத்து கொல்லப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், அஜித் குமாரை தாக்கிய 6 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் அஜித்குமார் கொல்லப்பட்டதற்கு எதிரான மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் விரிவான விசாரணை முடித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐ-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரிப்பதற்கான விசாரணை அதிகாரி மற்றும் குழுவை ஒரு வாரத்தில் நியமிக்க வேண்டும் என சிபிஐ இயக்குநருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.