நாகப்பட்டினம்,நவ.8- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 27ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை பருத்தித்துறை நீதிமன்றத்தில் வெள்ளியன்று நடை பெற்றது. அப்போது நீதிபதி கிருஷாந்தன், மீனவர்கள் 12 பேரும், இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தால் நேரடியாக சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.