ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் கோகுண்டா தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் பிரதாப் லால் பீல் (56). திருமணமான இவர்,மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
இதனிடையே, நிகழ்ச்சி ஒன்றில், மத்தியப்பிரதேச மாநிலம் நீமுச் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், பிரதாப் லால்பீலுக்கு அறிமுகமாகி உள்ளார். அவருக்கும் குடும்பத்தில் பிரச்சனையில் இருந் துள்ளது. இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக எம்எல்ஏ, அந்தப் பெண்ணிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வந்துள்ளார். அந்தப் பெண்ணோ, உங்கள் குடும்பத்தாரின் சம்மதம் இருக்கும்பட்சத்தில் மட்டுமே திருமணத்திற்கு ஒப்புக்கொள்வேன் என்று உறுதியாக இருந்துள்ளார்.இதனிடையே, 2020 நவம்பர் 8-ஆம் தேதி,தனது குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்றுவிட்டதாகவும், நேரில் பேசுவதற்கு உதய்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறும் பெண்ணை அழைத்துள்ளார். அந்தப் பெண்ணும் நம்பிச் சென்றுள்ளார். ஆனால், பாஜக எம்எல்ஏ பிரதாப் லால் பீல்,அந்தப் பெண்ணை, பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பலமுறை முயற்சித்தும், பாஜக எம்எல்ஏ-வை சம்பந்தப்பட்ட பெண்ணால் சந்திக்க முடியவில்லை. போன் செய்தாலும் எம்எல்ஏ எடுப்பதில்லை.இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட, உதய்பூர் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் பஞ்சார், எம்எல்ஏ மீதுபாலியல் வல்லுறவு வழக்கு பதிவு செய்து,குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.