states

புதுவை செவித்திறன் சிறப்புப் பள்ளியில் தமிழக மாணவர்களும் பயிலலாம்

புதுச்சேரி, ஏப். 7- செவித்திறன் குன்றிய மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் தமிழக மாணவர்களும் சேர்ந்து படிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி வேளாண் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசு, சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஆனந்தரங்கபிள்ளை செவித்திறன் குன்றிய மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகள் சிறப்பு பள்ளி 1963ஆம் ஆண்டு முதல் பிள்ளைச்சாவடியில் செயல்படுகிறது. இதில் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகளும் இதுவரை பயன்பெற்று வந்தனர். இந்த சிறப்பு பள்ளியானது 2021ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி பகுதியை சேர்ந்த செவித்திறன் குன்றிய மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி வருகிறது. இதனால் இப்பள்ளியில் தேவையான அனைத்து வசதிகள் இருந்தும் போதுமான எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன் பெறுவதில் ஏற்பட்ட சிரமத்தை கருத்தில்கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனைப்படி ஆனந்தரங்கபிள்ளை சிறப்பு பள்ளி முன்பு செயல்பட்டது போல் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த வாய்பேச இயலாத செவிதிறன் குன்றிய மற்றும் பார்வையற்ற குழந்தைகளை சேர்த்து மீண்டும் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.