புதுச்சேரி,ஏப்ரல்.5- அநியாய மின் கட்டண உயர்வை புதுச்சேரி அரசு திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நிறைவு பெறும் வரை பொறுத்திருந்து மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க பார்க்கிறது பாஜக என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு. ஏற்கனவே பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வு, கேபிள் டிவி, தொலை பேசி கட்டண உயர்வு, குப்பை வரி, வீட்டு வரி உயர்வு, அரிசிக்கும் ஜிஎஸ்டி வரி உயர்வு என அனைத்து வகையிலும் மக்களிடம் வரி மேல் வரி போட்டு மக்களை வஞ்சித்து வரும் நிலையில் புதுச்சேரி மக்களுக்கு மேலும் ஒரு பேரிடியாக இந்த மின் கட்டணம் உள்ளது. இந்த மின் கட்டண உயர்வு சாதாரண ஏழை எளிய மக்கள் மீது அரசு கொடுக்கும் தாக்குதலாகும். குறிப்பாக மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 200 யூனிட் பயன்படுத் தக்கூடிய ஒரு ஏழைத் தொழிலாளி குடும்பம் ஆண்டிற்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது கடந்த இரண்டு ஆண்டுகளாக என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தி கொண்டே இருக்கிறது. மேலும் நிரந்தர சேவை கட்டணம் என்று புதிய முறையில் மக்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. இத்த கைய கட்டண உயர்வு யாருக்காக செய்யப்படுகிறது. கடந்த வாரம் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் மின்துறை லாபத்தில் இயங்குவதாக வும் சுமார் 250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதாகவும் கூறினார். அதே நேரம் மின்துறையை விற்கப் போவதாகவும் கூறுகிறார். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு சேவைக் கட்டணம், நிரந்தரக் கட்டணம், இழப்புக் கட்டணம் என பல புதிய கட்டண முறைகள் புதுச் சேரியில் மட்டும் கடந்த ஒரு வருட மாக அமல்படுத்தப்பட்டு வருவது ஏன் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். அரசு செலவில் மின் துறையை நவீனப்படுத்துவது, அரசு துறையாக இருக்கும் போதே மின்துறையை வாங்கப் போகும் தனியார் நிறுவ னத்திற்கு ஆதரவாக பல்வேறு மின் கட்டணங்களை அமல்படுத்தி பிறகு மின் துறையை தனியாருக்கு தாரை வார்த்து, பிறகு அவர்கள் மக்களை கொள்ளையடிக்க அனைத்து வழிகளையும் ஆளும் அரசு செய்து வருவது அம்பலமாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அரசு மின்துறை மூலம் கட்டண உயர்வு பற்றி பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டத்தை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர்கள் முன்னிலையில் நடத்தியது. அதில் கலந்து கொண்ட ஒருவர் கூட மின் கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள வில்லை. மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்தும், ப்ரீபெய்ட் மின் கட்டண திட்டத்தை எதிர்த்தும் கருத்துக்களை முன் வைத்தனர் ஆனால் மக்கள் முன்வைத்த கருத்துக்கு செவிசாய்க்கா மல் ஆணையமும், அரசும் இணைந்து பொதுமக்களின் மீது அதிக சுமையை ஏற்றி வருவது கண்டிக்கத்தக்கது. மேலும் அரசுத் துறை நிறுவ னங்கள் சுமார் 500 கோடி, தனியார் நிறுவனங்கள் 200 கோடி என மின் கட்டண பாக்கி நிலுவையில் இருக்கும் போது அதனை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கடும் ஊழியர் பற்றாக்குறையோடு செயல்படும் மின்துறைக்கு புதிய ஆட்களையும் நியமனம் செய்வ தில்லை. தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு சீரழித்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் மீது மின் கட்டண உயர்வை சுமத்தும் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே அநியாயமாக உயர்த்தப் பட்ட மின் கட்டண உயர்வை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். மேலும் லாபத்தில் இயங்கும் மின் துறையை தனியார் மயமாக்கக் கூடாது. இல்லையென்றால் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.