புதுச்சேரி,ஏப். 28- புதுச்சேரி கடற்கரை பழைய துறைமுக வளாகத்தில் சுகாதாரத் திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. ஒன்றிய சுகாதாரத்துறை மற்றும் புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நலவாழ்வுத்துறை சார்பில் சுகாதார திருவிழா ஏப்.29 முதல் 3 நாட்கள் புதுச்சேரி கடற்கரை பழைய துறைமுகத்தில் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சுகாதார சிறப்பு வல்லுநர்கள், தலைமை மருத்துவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தமிழர் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா, ஆரோக்கியமான உணவு கண்காட்சி நடைபெறும்.
முதல்வர் ரங்கசாமி
மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த படிக்க கனவுடன் இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ திருவிழாவில் பங்குபெற்று உங்களுக்கு தேவையான அனைத்து சந்தேகங்களையும் மருத்துவ வல்லுனரின் ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த அறிய வாய்ப்பை புதுச்சேரி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பாடுகள் குறித்து கண்காணிப்பு கேமரா செயல்பாட்டை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் துவக்கி வைத்தார். இச்சந்திப்பின்போது சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட உயர் மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.