விவசாய சங்கங்கள் அறைகூவல் விடுத்த டிசம்பர் 8 பாரத் பந்த், மக்களின் ஆதரவுடன் மகத்தான வெற்றிபெற்றது.பந்த் அறைகூவலுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் தொழிற்சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாதர்அமைப்புகள் எனசமூகத்தின் அனைத்துத்தரப்பினரும் தன்னெழுச்சியான முறையில் பங்கேற்று வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றனர். இது, இந்தப் பிரச்சனையில் மோடி அரசாங்கம் தனிமைப்பட்டிருப்பதையே காட்டுகிறது. மேலும், இக் கிளர்ச்சி நடவடிக்கைக்கு, அநேகமாக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்கள் ஆதரவினை வெளிப்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் பாஜக அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இதுவரை தங்களைக் காட்டிக் கொண்டிராத மாநில ஆளும் கட்சிகள் கூட இப்போது தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மாநில ஆளும் கட்சிகளின் ஆதரவு
தெலுங்கானாவில், ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பந்த் வெற்றி பெறுவதற்கு சுறுசுறுப்பாக வேலை செய்தது. அதே போன்று ஆந்திராவில் ஒய்எஸ்ஆர்சிபி அரசாங்கமும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்க அலுவலகங்கள் அனைத்தையும் மூடியும், போக்குவரத்து மற்றும் கல்வி நிறுவனங்களை 1 மணிவரையிலும் மூடியும் ஆதரவு அளித்துள்ளது. ஒடிசாவிலும் கூட பிஜு ஜனதாதளம் பந்த்திற்கு ஆதரவு நல்கவில்லை என்ற போதிலும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, அரசாங்க அலுவலகங்களை மூடிவிட்டது.விவசாய சங்கங்களின் கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் கொள்கைநிலைகளுக்கு அப்பாற்பட்டு மிகவும் விரிவான அளவில் ஆதரவு கிடைத்திருப்பது, கோரிக்கையின் வர்க்கப் பிளவினைத் தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கார்ப்பரேட் ஆதரவு வேளாண்சட்டங்கள், ஒரு பக்கத்தில் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மறு பக்கத்தில் பணக்கார விவசாயிகள் உட்படஅனைத்துத் தரப்பு விவசாயிகளையும் ஒருங்கிணைத்திருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுக்களில் கூட பிளவு ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்தும் சேர்ந்துதான் நடைமுறையில் விவசாயிகளின் கோரிக்கைக்கு மாநிலக் கட்சிகளிடமிருந்தும் ஆதரவினை ஒருமனதாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
விவசாயிகள் - தொழிலாளர்கள் ஒற்றுமை அதிகரிப்பு
இப்போராட்டத்தினூடே உருவாகி வளர்ந்துள்ள மற்றுமொரு முக்கியமான அம்சம், விவசாயிகள் – தொழிலாளர்கள் ஒற்றுமை அதிகரித்திருப்பதாகும். மோடி அரசாங்கம், மூன்று வேளாண் சட்டங்களிலும் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றியும், நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வெளிப்படையாகவே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான நிலை எடுத்ததற்குப் பின்னர், விவசாயிகளும், தொழிலாளர்களும் இவ்விரு தாக்குதல்களுக்கு எதிராகவும் ஒன்றுபட்டுப் போராட முன் வந்திருக்கின்றனர்.மோடி அரசாங்கம், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் முதலில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவசரச் சட்டங்களாகக் கொண்டு வந்தது. பின்னர் இந்த அவசரச் சட்டங்கள், செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நடைமுறைவிதிகள் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு, சட்ட முன்வடிவுகளாகத் தாக்கல் செய்யப்பட்டன. அரசாங்கம், இவற்றை அவசரச் சட்டங்களாகப் பிரகடனம் செய்த போதே தன் நோக்கத்தைத் தெளிவுபடுத்திவிட்டது.
தனியார் துறைக்கும்
அந்நிய முதலீட்டுக்கும் சுதந்திரம்
எடுத்துக்காட்டாக, அத்தியாவசியப்பொருள்கள் சட்டத்தின் பட்டியலிலிருந்து வேளாண் பொருள்கள் அனைத்தையும் நீக்குவதற்காக, திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருப்பது தொடர்பாக, அரசாங்கத்தின் தரப்பில் கூறப்பட்டிருக்கும் விளக்கம் என்ன தெரியுமா? “வேளாண்துறையில் தனியார் துறையும், அந்நிய நேரடி முதலீடும் தங்குதடையின்றி நுழைவதைக் கவர்வதற்காகவும், அதன்மூலம் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கு இட்டுச்செல்லும் விதத்தில் வேளாண் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும், வைத்திருப்பதற்கும், நீக்குவதற்கும், விநியோகிப்பதற்கும், சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதேயாகும்,” என்று கூறியிருக்கிறது. வேளாண் சந்தைகளில் இருந்த கட்டுப்பாடுகளைஅகற்றவும், சந்தைகளை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து பறித்தெடுத்து, கார்ப்பரேட் வேளாண் வர்த்தகம் மற்றும் பெரும் வர்த்தகர்கள் சுதந்திரமாகவும், தங்குதடையின்றியும் நுழைவதற்கும் வசதி செய்து கொடுக்கும் விதத்தில் மத்தியத்துவப்படுத்திடவும், இம்மூன்று வேளாண் சட்டங்களும் ஒருங்கிணைந்து உதவுகின்றன.
ஆபத்துக்களைப் புரிந்து கொண்ட விவசாயிகள்
வேளாண் அவசரச்சட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட சமயத்திலேயே, விவசாயிகள் இதில் உள்ள ஆபத்துக்களைப் புரிந்து கொண்டு விட்டார்கள். இவற்றுக்கு எதிரான இயக்கம் என்பதும் ஜூலையிலேயே துவங்கி விட்டது. தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு இந்த அவசரச்சட்டங்களுக்கு எதிராக ஆகஸ்ட் 5 அன்றே சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்தது. இதில் 25 மாநிலங்களிலிருந்தும், 600 மாவட்டங்களிலும் பல லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றார்கள். பஞ்சாபில், அக்டோபர் 1 அன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ சார்பில் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறிவித்திருந்த அகில இந்திய வேலை நிறுத்த தினமான நவம்பர் 26 அன்று, ‘தில்லி செல்வோம்’ இயக்கத்திற்கும்அறைகூவல் விடுக்கப்பட்டது.தில்லியின் எல்லைகளில் மிகப் பெரிய அளவில் கிளர்ச்சிப் போராட்டங்களை எதிர்கொண்டுவரும் மத்திய அரசாங்கம், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியது. மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்த பின்னர், அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் மற்றும் மின்சார சட்டமுன்வடிவையும் ரத்து செய்ய விரும்பவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
கார்ப்பரேட் ஊடகங்கள்
பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினர் கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுவதாகவும், விவசாயிகளைத் தவறானமுறையில் வழிநடத்திக்கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். சென்ற நூற்றாண்டின் சட்டங்கள் தொன்மையானவை என்றும், அவற்றால் இப்போதைய நூற்றாண்டைக் கட்டி எழுப்பிடப் பயன்படுத்த முடியாது என்றும் கூறியிருக்கிறார்.அரசாங்கம், கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறமுடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது. பெரும் முதலாளிகளின் வர்க்க நலன்களை, நாட்டிலுள்ள கார்ப்பரேட் ஊடகங்கள் தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவை, அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிராகரித்திட வேண்டும் என்றும் அரசாங்கத்தினை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் டிசம்பர் 9 தலையங்கம் இந்த நிலைப்பாட்டைப் பிரதிபலித்திருக்கிறது. அது கூறுவதாவது: “அரசாங்கம், குறைந்தபட்ச ஆதாரவிலை அல்லது வேளாண் சட்டங்கள் மீது, கிளர்ச்சிப் போராட்டங்களின் நிர்ப்பந்தம் காரணமாக சமரசம் செய்துகொண்டால், இதன்மூலம் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் எவ்விதமான சீர்திருத்தத்திற்கான முயற்சியாக இருந்தாலும், அதனை எதிர்க்கட்சிகளில் சில குழுக்கள் நாசவேலைகள் மூலம் தடுத்திட முடியும் என்பதற்கும், நாட்டின் தலைநகரை முற்றுகையிட முடியும் என்பதற்கும் ஒரு சமிக்ஞையாக அமைந்துவிடும்.”
ஒன்றுபட்ட போராட்டமாக
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், விவசாய சங்கங்களின் கூட்டுமேடை போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர வேறு மார்க்கமில்லை. அரசாங்கம் எழுத்துப்பூர்வமாக அளித்த முன்மொழிவுகளை நிராகரித்து, போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு எடுத்திருக்கிறார்கள். அவர்கள் வெளிப்படுத்தியுள்ள மகத்தான ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இயக்கத்தைப் பிளவுபடுத்த அரசாங்கம் இழிமுயற்சிகளில் இறங்கியிருக்கக்கூடிய சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமாகும்.
விவசாயிகளின் இந்த உயிர்நாடியான போராட்டம் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினராலும் ஒருமைப்பாடு தெரிவிக்கப்பட்டு, ஆதரவு அளிக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்திடும் சிறப்புப் பொறுப்பு மட்டுமல்லாது, வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் இரட்டைப் போராட்டங்களை ஒருங்கிணைத்து, ஓர் ஒன்றுபட்ட போராட்டமாகக் கட்டி எழுப்பிடும் பணியும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன் உள்ளது.
டிசம்பர் 9, 2020, தமிழில் : ச.வீரமணி