states

img

ரூ. 22,842 கோடி வங்கி மோசடி: ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு  

22,842 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக ஏபிஜி ஷிப்யார்டு லிமிடெட் மற்றும் நிர்வாக இயக்குனர் ரிஷி கமலேஷ் அகர்வால் உள்ளிட்டோர் மீது வங்கி மோசடி வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது என அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.  

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏபிஜி நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஏபிஜி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் கப்பல் கட்டுதல் மற்றும் சரி செய்யும் பணிகளில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், குஜராத்தின் தாகேஜ் மற்றும் சூரத் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்தது.  

இந்த நிலையில் ஸ்டேட் வங்கியில் ரூ.2,925 கோடி, ஐசிஐசிஐ வங்கியில் ரூ.7,089 கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.3,634 கோடி, பாங்க் ஆப் பரோடாவில் ரூ.1,614 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.1,244 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.1,228 கோடி கடன் வாங்கி உள்ளது. 28 வங்கிகளில் கடன்கள் பெற்று, அவற்றை வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தி, வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றி இந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. தற்போது இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை சிபிஐ, தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.  

முன்னதாக ஏபிஜி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் மீது கடந்த 2019 நவ.8ல் ஸ்டேட் வங்கி புகார் அளித்திருந்தது. அதன் பின்னர் 2020 மார்ச் 12ல் சிபிஐ சில விளக்கங்களை கேட்டுள்ளது. அதன் பிறகு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்டேட் வங்கி புதிதாக புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தின் வர்த்தகங்களைக் கண்காணித்து வந்த சிபிஐ, 2022 பிப்.7 அன்று வழக்குப்பதிவு செய்து அந்நிறுவனத்திற்கு சொந்தமான 13 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.  

இதுதொடர்பாக ஏபிஜி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி, அஷ்வினி குமார், சுஷில் குமார் அகர்வால் மற்றும் ரவி விமல் நெவெடியா ஆகியோர் மீது குற்றவியல் சதி, ஏமாற்றுதல், கிரிமினல் நம்பிக்கை மீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.