மத்தியப் பிரதேசத்தில் வறண்ட கிணற்றில் கார் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் வறண்ட கிணற்றில் கார் கவிழ்ந்து விழுந்ததில், ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் லெண்டகெண்டி கிராமத்தில் வசிப்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவர்கள் புதன்கிழமை இரவு கார் ஒன்றில் திருமண விழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கொடமா என்ற இடத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரைக் காப்பாற்ற முற்பட்ட வேளையில், காரானது கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த வறண்ட கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர முயற்சிக்கு பிறகு கிணற்றில் இருந்து 7 உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் காயமடைந்த 3 பேரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக சிந்த்வாரா காவல்துறை கண்காணிப்பாளர் விவேக் அகர்வால் தெரிவித்தார். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.