இந்தூர் குடியிருப்பு பகுதியில் தீ விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்தில் விசாரணை மூலம் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் விஜய் நகர் பகுதியில் ஸ்வார்ன் பாக் காலனியில் உள்ள 3 மாடி குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை அதிகாலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கட்டிடத்தில் சுமார் 16 பேர் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டடத்தின் தரைத்தளத்திலும், படிக்கட்டுகளிலும் உள்ள பிரதான கதவைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் தீ மற்றும் கரும் புகையால் சூழப்பட்டது. அதே நேரத்தில் 3 ஆவது மாடியிலிருந்து மேல் தளத்துக்குச் செல்லும் கதவு மிகவும் அனல் அடித்ததால், பெரும்பாலானோர் கட்டடத்திற்குள் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. சிலர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தங்கள் குடியிருப்புகளின் பால்கனிக்கு விரைந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மின்சார மீட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் கட்டடத்தின் உரிமையாளர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 304 கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. அதில், இளைஞர் ஒருவர் கட்டிடம் இருந்த பகுதிக்கு வந்து, அங்குள்ள ஒரு குறிப்பிட்ட இருசக்கர வாகனத்தில் தீயை பற்ற வைத்துள்ளார். ஆனால் தீ அருகிலிருந்த மற்ற வாகனங்களிலும் பரவ தொடங்கியதால் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வந்ததில், தீக்ஷித் என்ற சஞ்சய் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சஞ்சயை போலீசார் கைது செய்தனர். சஞ்சையிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அதே குடியிருப்பில் வசித்த இளம்பெண் ஒருவரை தான் நேசித்ததாகவும், தன்னிடம் அவர் நிறைய பண உதவிகளை பெற்றுள்ளார். ஆனால் திடீரென அவர் காதலை புறக்கணித்து வேறொர் இடத்தில் திருமணம் முடிவு செய்ததால், ஆத்திரமடைந்து தீ வைத்ததாகவும் தெரிவித்தார். பெண்ணை பழிவாங்க அவரது ஸ்கூட்டரை எரிக்கவே நினைத்தேன் என்றார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.