கேரளத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்கும் முயற்சியை மக்கள் நிராகரிப்பார்கள் என கேரள் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் சுதிப்தோ சென் என்பவரின் இயக்கத்தில் வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தில் கேரளத்தில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொய் தகவல்களை முன்வைத்து எழுக்கப்பட்ட நிலையில், கேரள அரசு இப்படத்திற்கு கண்டனம் தெரிவித்தது. தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு காரணங்களால் திரையரங்குகள் தாமாகவே காட்சிகளை நிறுத்தி வைத்தன.
தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும், கட்டாயப்படுத்தி மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் போன்ற காட்சிகள் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கேரளத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்கும் முயற்சியை மக்கள் நிராகரிப்பார்கள் என கேரள் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
வெறுப்பைத் தூண்டும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் அடுத்த பாகம் வெளியீடு குறித்த செய்திகளை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். ஏற்கனவே முதல் பாகம் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையும், அப்பட்டமான பொய்களையும் கொண்டிருந்தது. நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை மோசமானதாக சித்தரித்து அவமதிக்கும் இந்த முயற்சியை கேரளம் மீண்டும் நிராகரிக்கும்.
வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் எவ்வாறு சுதந்திரமாக அனுமதிக்கப்படுகின்றன என்பதும், அதே நேரத்தில் ஒரு கலையின் விமர்சன ரீதியான வெளிப்பாடுகள் எவ்வாறு அடக்கப்படுகின்றன என்பதும் அதிர்ச்சியளிக்கின்றன. மதநல்லிணக்கம் கொண்ட நமது மண்ணை, பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். உண்மை எப்போதும் வெல்லும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
