திருவனந்தபுரம்:
சமூக ஊடகத்தில் பத்திரிகையாளரை அவமதித்த ஐஏஎஸ் அதிகாரி என். பிரசாந்த் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கேரள பத்திரிகையாளர் சங்கம் (கேஜேயூ) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கேரள பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் கே.பி. ராஜி, பொதுச் செயலாளர் இ.எஸ். சுபாஷ் ஆகியோர் முதல்வர் பினராயி விஜயன், தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஆழ்கடல் மீன்பிடிக்கும் திட்டம் தொடர்பான பிரச்சனையில் கேரள கப்பல் மற்றும் இன்லேண்ட் நேவிகேசன் கழகத்தின்(கேஎஸ்ஐஎன்சி) நிர்வாக இயக்குநர் என்.பிரசாந்த் என்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் மாத்ருபூமி நிருபர் கே.பி. ப்ரவிதா கேள்வி கேட்டுள்ளார். அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆர்வம் இல்லையென்றால் பதிலளிக்காதது இயல்பானது, ஆனால் ஒரு மூத்த சிவில் சர்வீஸ் அதிகாரி ஒரு பத்திரிகையாளருக்கு ஆபாசப் படங்களை அனுப்பி அவமதிக்க முயற்சிப்பது ஒழுக்கமானது அல்ல.பிரசாந்தைப் போலவே அவரது மனைவி லட்சுமி பிரசாந்த்தும், முகநூலில் பிரசாந்த் உடன் பகிர்ந்து கொண்ட ஒரு இடுகையின் மூலம் ஒட்டுமொத்த ஊடகங்களையும் அவமதித்துள்ளார். விவாதத்துக்குரிய பொருள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து கருத்துத் தேடுவது கேரளாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் வழக்கம். அந்த வகையில், அவரை (என்.பிரசாந்த்) தொலைபேசியில் தொடர்புகொள்ள இயலாதபோது ‘இப்போது பேச முடியுமா’ என்று மிகவும் நாகரிகமான முறையில் குறுந்தகவலாகத்தான் செய்தியாளர் கேட்டுள்ளார். இதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஆபாசமான ‘இமேஜி’ யுடன் பதிலளித்துள்ளார். இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஊடக சமூகத்திற்கும் பொது சமூகத்திற்கும் ஒரு சவாலும் அவமானமும் ஆகும்.இவ்வாறு கேரள பத்திரிகையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.