திருவனந்தபுரம்:
கேரளத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் கவுன்சில் (டிடிபிசி) ஊழியர்களின் சம்பளத்தில் இடைக்கால உதவியாக பத்து சதவிகிதம் உயர்த்தி வழங்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அந்தந்த டிடிபிசி-க்கள் ஊழியர்களுக்கு பணிக்கொடை (கிராஜுவிட்டி), இஎஸ்ஐ மற்றும் காப்பீட்டை வழங்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.ஒரே விதமான வேலைகளைச் செய்யும் ஊழியர்களுக்கு இப்போது வெவ்வேறு டிடிபிசி-களில் வெவ்வேறு ஊதிய விகிதங்களில் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. இதை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் படி, பணியின் தன்மையைக் கருத்தில் கொண்டு 4 பிரிவுகளில் 15 பதவிகளை மட்டுமே நிர்ணயிப்பதன் மூலம் அனைத்து டிடிபிசி-களிலும் சம்பளத்தை ஒருங்கிணைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.பி.சத்யன் எம்எல்ஏ, சுற்றுலா முதன்மை செயலாளர் ராணி ஜார்ஜ், சுற்றுலா இயக்குநர் வி.ஆர். கிருஷ்ணதேஜா மற்றும் ஊழியர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.