states

img

கேரள காவல்துறை போட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டுமாம்... உயர் நீதிமன்றத்திற்கு ஓடிய மத்திய அமலாக்கத்துறை...

திருவனந்தபுரம்:
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சொப்னா சுரேஷை, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மிரட்டி கட்டாயப்படுத்திய ஆடியோ ஒன்று அண்மையில் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு சொப்னாவை அமலாக்கத்துறை மிரட்டியது உண்மைதான் என்று, சொப்னாவின் பாதுகாப்புக்கு பொறுப்பாகஇருந்த நான்கு பெண் காவல்துறை அதிகாரிகளும் பகிரங்கமாக வாக்குமூலம் அளித்தனர். தங்கக் கடத்தலில் முதல்வரின் பெயரைக் குறிப்பிட்டால் மன்னிக்கப்பட்ட சாட்சி (அப்ரூவர்) ஆக்குகிறோம் என்று அமலாக்கத்துறை டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் சொப்னாவுக்கு உத்தரவாதம் அளித்ததை அவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். அப்போதே, கேரள முதல்வர் மீது அவதூறு பரப்பும் வகையில், பொய்யான வாக்குமூலம் அளிக்க வலியுறுத்தியது தொடர்பாக, மத்திய அமலாக்கத்துறை (Enforcement Directorate) அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதென கேரள காவல்துறை முடிவு செய்தது.அமலாக்க இயக்குநரகம் பகுதியளவு - நீதித்துறை அந்தஸ்தைக் கொண்டிருப்பதால், வழக்குரைஞர் ஜெனரலிடம், கேரள உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சட்ட ஆலோசனை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, கேரள முதல்வர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப முயன்றதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது சிஆர்பிசி 120-பி, 195-ஏ, 192, 167 ஆகிய பிரிவுகளில் கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இது மத்திய அமலாக்கத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், அதை வெளிக்காட்டாமல் “கேரள போலீசாரின் வழக்கை எவ்வாறு சந்திக்கவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் சமாளித்தன.இந்நிலையில், “தங்கள் மீதான கேரள காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று கேரள உயர் நீதிமன்றத்திற்கு ஓடியுள்ளனர். அத்துடன், “தங்கள் மீது வழக்குப் பதிவு செய்த கேரளபோலீசாரின் செயல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று அலறித் துடித்துள்ளனர்.இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகளை மார்ச் 30 வரை கைது செய்யக்கூடாது என்று கேரள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.