திருவனந்தபுரம்:
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சொப்னாசுரேஷை மிரட்டி, கேரள முதல் வர் பினராயி விஜயனுக்கு எதிராக பொய் வாக்குமூலம் பெற முயன்றதாக அமலாக்கத்துறை மீது கேரள காவல்துறை அண் மையில் குற்றம் சாட்டியது. அத்துடன் சிஆர்பிசி 120-பி, 195-ஏ,192, 167 ஆகிய 4 பிரிவுகளில் அமலாக்கத்துறை மீது வழக்கும் பதிவுசெய்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், கைது நடவடிக்கைக்குபயந்து, கேரள உயர் நீதிமன்றத்திற்கு ஓடினர். தங்கள் மீதான கேரள காவல்துறையினரின் வழக்கை ரத்து செய்ய வேண்டும்;கேரள போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர்.இந்த மனு உயர் நீதிமன்ற தனிநீதிபதி வி.ஜி. அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள காவல் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சுமன் சக்கரவர்த்தி “கேரள போலீசார் அடையாளம் தெரியாத அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீதுதான் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எந்த அதிகாரியையும் கைது செய்யவில்லை. சோதனைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இந்தவழக்கில் முக்கியச் சாட்சியிடம் இருந்து போலீசார் வாக்குமூலம் பெற விரும்புகின்றனர். இந்நிலையில், வழக்குப் பதிவுக்கோ அல்லது விசாரணைக்கோ தடை விதித்தால், போலீசாரின் திட்டங்கள் அனைத்தும் வீணாகும். சாட்சியிடம் வாக்குமூலம் பெற முடியாது” எனத் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை இயக்குநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இதற்கு முன் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிய சொப்னா சுரேஷ் தனக்குயாரும் எந்த அழுத்தம் கொடுத்ததாகவோ அல்லது கொடுமைப் படுத்தியதாகவோ புகார் ஏதும் தரவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்தத் தொந்தரவும் செய்யவில்லை என்றே தெரிவித்துள்ளார். இவ்வாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது சட்டவிரோதம்” என்று கூறினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி அருண், “சொப்னா சுரேஷ் உள்ளிட்டவர்கள் வேறு ஒரு விசாரணை அமைப்புக்கு வழங்கியவாக்குமூலங்கள், சாட்சியங் களை நீங்கள் எவ்வாறு பெற்று இந்த வழக்கில் தாக்கல் செய்தீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.அதற்கு “கலால் வரித்துறையிடம் இருந்துதான் இந்த ஆதாரங்களைப் பெற்றுத் தாக்கல் செய்தோம்” என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.இதையடுத்து, நீதிபதி வி.ஜி.அருண் பிறப்பித்த உத்தரவில்,“மார்ச் 30 வரை அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிராகக்கேரள போலீசார் எந்த நடவடிக் கையும் எடுக்கக் கூடாது” என்று உத்தரவிட்டார். அதேநேரம், “கேரள காவல்துறையினரின் விசாரணைக்குத் தடைவிதிக்கமுடியாது. அமலாக்கத்துறையினர் மீதான எப்.ஐ.ஆரையும் ரத்து செய்ய முடியாது” என்று தீர்ப்பளித்துள்ளார்.