குஜராத்,அக்.05- குஜராத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்திற்குக் குஜராத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி குஜராத் மாநிலம் உதய்பூர் மாவட்டம் துர்கேடா கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை சாலை வசதி இல்லாததால் 5 கிலோமீட்டர் துணியிலேயே கட்டி தூக்கிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் குழந்தை பிறந்து ஆம்புலன்ஸ்க்கு வருவதற்குள் அந்த பெண் உயிரிழந்துள்ளார். நாளிதழில் வெளிவந்த இச்செய்தியைப் பார்த்த குஜராத் உயர்நீதிமன்றம் தானே முன்வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இதுபோன்ற செய்தியால் நாங்கள் அவமானமுற்று தலை கவிழ்ந்தோம் எனக் குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் வளர்ச்சியான நகரம் எனப் பேசும் போது இதுபோன்ற சம்பவங்கள் தான் நினைவுக்கு வருகிறது, காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் அவர் பிறந்தநாளன்றே இதுபோன்று நடந்திருப்பது வேதனையளிக்கிறது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தின் நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், வருகின்ற 17ஆம் தேதிக்குள் இதுதொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.