ஒன்றிய அரசு எனது அமர்வை தவிர்க்கிறது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரபரப்பு குற்றச்சாட்டு
புதுதில்லி அரசுக்கெதிரான வழக்கைத் தனது அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சேவை நிபந்தனை களை ஒரே மாதிரியாக்கும் தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்துக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றைத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த விசாரணை யில் மனுதாரர்களின் இறுதி வாதங்கள் வரை அனைத்தும் விசாரிக்கப்பட்டுவிட்ட நிலையில், அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் பங்கேற்க வேண்டுகோள் வைத்ததன் பேரில் சில நாள்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறிருக்க, வழக்கு மீண்டும் விசார ணைக்கு வருவதற்கு முன்பு வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு திடீரென ஒன்றிய அரசு, இவ் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றக் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், திங்களன்று தீர்ப்பாய வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,”ஒன்றிய அரசு இதுபோன்ற உத்தியைக் கையாண்டு நீதிமன்றத்துடன் விளையாடும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மனுதாரர்கள் தங்களின் வாதங்களை முடித்த பிறகு ஒன்றிய அரசு இவ்வாறு கோரிக்கை வைப்பது அதிர்ச்சி யளிக்கிறது. இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். அரசுக்கெதிரான வழக்கை எனது அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்ப வில்லை. விரைவில் நான் ஓய்வுபெறப் போவ தால்தான் ஒன்றிய அரசு இப்படியொரு நடவ டிக்கையை எடுத்து வருகிறது என்பதையும் கவனிக்கிறேன்” என குற்றம்சாட்டினார். தலைமை நீதிபதியின் கூற்றைத் தொடர்ந்து அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, “அரசாங்கத்தின் நோக்கம் நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துவது அல்ல. ஒரு பெரிய அமர்வால் பரிசீலிக்கப்பட வேண்டிய அரசிய லமைப்பு விளக்கம் தொடர்பான பெரிய கேள்வி கள் இருப்பதாக உணர்கிறோம்” என்று ஒன்றிய அரசின் கோரிக்கையை நியாயப்படுத்த முயன்றார். இருப்பினும் தனது முடிவில் உறுதியாக இருந்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “முதலில் அரசாங்கம் நள்ளிரவில் மனுவைத் தாக்கல் செய்தது நீதிமன்ற நடைமுறையை மீறும் செயல். இந்த விஷயத்தை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைப்பது அவசி யம் என்று நாங்கள் நினைத்தால், நாங்களே அதைச் செய்வோம்” என்று தீர்க்கமாகக் கூறி வழக்கை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். தலைமை நீதிபதியின் கருத்து நாடு முழு வதும் கவனத்தை பெற்றுள்ளது. நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் 2025 நவம்பர் 23ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த குறுகிய காலத்தில் அவர் பல சவால்களையும், முக்கிய நிகழ்வுகளையும் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
