புதுதில்லியில் உள்ள மிகப்பெரும் பள்ளிக்கூடம் ஒன்று, சமீபத்தில் மாணவர்கள்மீது உயர்த்தப்பட்ட கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கு மறுத்த காரணத்தால், அதன் நிர்வாகப் பொறுப்பை தில்லி மாநில அரசாங்கமே எடுத்துக்கொள்ள தீர்மானித்திருக்கிறது. புதுதில்லியில் மாளவியா நகர் அருகேயுள்ள ‘ஏபிஜே ஸ்கூல்” என்னும் மிகப்பெரிய தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இது சமீபத்தில் மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டண விகிதங்களை கடுமையாக அதிகரித்தது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் தில்லி அரசாங்கத்திடும் முறையிட்டார்கள். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தில்லி மாநில அரசாங்கத்தின் சார்பில், கல்வி இயக்குநரகம் மேற்படி பள்ளிக்கூடத்தின் கணக்குகளை ஆய்வு செய்தது. 2012ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை ஒவ்வோராண்டும் வசூலிக்கப்பட்ட கட்டணங்களின் மொத்த மதிப்பு 49 கோடியே 79 லட்சமாக இருந்ததும், ஆனால் அதன் செலவினங்கள் வெறும் 18 கோடியே 87 லட்சம் மட்டுமே என்பதும் தெரியவந்தது. இவ்வாறு நிகர உபரி 30 கோடியே 85 லட்சம் கையில் இருக்கிறது. எனவே இவ்வாறு மாணவர் கல்விக்கட்டணத்தை உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்தது. எனவே அரசாங்கத்தின்தரப்பில் பலதடவைகள் கல்வி நிர்வாகத்திடம் கட்டணங்களை உயர்த்தக்கூடாது என வலியுறுத்தியும் அது அதற்கு செவிசாய்க்கவில்லை. எனவே பெற்றோர்களின் நலனைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பள்ளி நிர்வாகத்தினை தில்லி மாநில அரசாங்கமே தன் கையில் எடுத்தக்கொள்ள முடிவு செய்திருக்கிறது. இதற்கு மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் ஒப்புதல் அளித்திருக்கிறார். (ந.நி) |