states

img

அதிரடி அரசியல் மாற்றங்களின் பின்னணியில் 16ஆவது மாநாடு! - அ. அன்வர் உசேன்

அதிரடி அரசியல் மாற்றங்களின் பின்னணியில் 16ஆவது மாநாடு! - அ. அன்வர் உசேன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 16ஆவது அகில இந்திய மாநாடு 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 முதல் 11 வரை கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த மாநாடு இந்தியாவில் பல முக்கிய அரசியல் நிகழ்வுகள் காலத்தில் நடைபெற்றது எனில் மிகை அல்ல. 1996 தேர்தல்கள்; 13 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ; இரண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கங்கள்; காங்கிரசின் ஆட்சி கவிழ்ப்பு; 1998 தேர்தல்கள்; முதல் முறையாக பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசாங்கம்; அதிகரித்த மதவாதத்தின் ஆபத்து; நவீன நாசகர பொருளாதார கொள்கைகள் அமலாக்கம் என மிக வேகமாக அரசியல் மாற்றங்கள் இந்த காலத்தில் நடைபெற்றன.  15 மற்றும் 16ஆவது மாநாடுகளுக்கு இடையே உள்ள காலத்தை கீழ்க்கண்ட வகையில் 3 கட்டங்களாக அரசியல்- ஸ்தாபன தீர்மானம் பிரிக்கிறது: 1. 1996 தேர்தல் வரையிலான காலம் 2. 1996-98; இரண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கங்கள் 3. 1998 தேர்தல்களும் பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் அமைந்ததும்.

பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ்

1996 தேர்தல்களுக்கு முன்பு காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து டெலிகாம் ஊழியர்கள்/ நிலக்கரி தொழிலாளர்கள்/ பம்பாய் தொழிலாளர்கள்/ வங்கி ஊழியர்கள் என பலதரப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றன. 125 பல்கலைக் கழகங்கள் மற்றும் 1200 கல்லூரிகளில் கல்வி தனியார்மயத்தை எதிர்த்து மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த பின்னணியில் 1996 தேர்தல்கள் நடந்தன. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ்/ பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் அடங்கிய ஒரு மாற்றை உருவாக்க நமது கட்சி செயல்பட்டது. தேசிய அளவில் இடதுசாரிகள்/ ஜனதா தளம்/ சமாஜ்வாதி கட்சி கூட்டாக செயல்பட்டன. மாநில அளவில்  தெலுங்கு தேசம்/ அசாம் கண பரிஷத்/ ஜனதாதளம் ஆகிய கட்சிகளுடன் பல மாநிலங்களில் தேர்தல் உடன்பாடு உருவானது. மகாராஷ்டிராவில் இடதுசாரிக் கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டு உருவானது. தமிழ்நாட்டில் நமது கட்சி ம.தி.மு.க.வுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.வுடனும் உடன்பாடு கண்டன. இந்த தேர்தல்களில் 142 தொகுதிகளில் மட்டுமே வென்று காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. எனினும் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க. தனியாக 160 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளுடன் 191 தொகுதிகளிலும் வென்றது. மூன்றாவது மாற்று இடதுசாரிகளுடன் சேர்த்து 134 இடங்களில் வென்றது. இந்த சூழலில் ஆட்சி அமைக்க முதலில் பா.ஜ.க. அனுமதிக்கப்பட்டது. ஆனால் 13 நாட்களில் ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. பின்னர் ஐக்கிய முன்னணி ஆட்சி தேவகவுடா தலைமையில் அமைந்தது. இந்த ஆட்சிக்கு இடதுசாரிகளும் காங்கிரசும் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. குறைந்தபட்ச பொதுத் திட்டம் (Common Minimum Programme) ஒன்றை உருவாக்கி அதன் அடிப்படையில் செயல்படுவது என ஒப்பந்தம் உருவானது.

 முக்கோண அரசியல் முரண்பாடுகள்

இந்த சூழலில் ஒருபுறம் பா.ஜ.க. தனது நிலையை மேலும் உறுதி செய்து கொள்ளவும்; மறுபுறம் தான் இழந்த செல்வாக்கை மீட்க காங்கிசும் அரசியல் நகர்வுகளை திட்டமிட்டன. காங்கிரஸ்- பாஜகவுக்கு மாற்றாக ஒரு மூன்றாவது மாற்றை உருவாக்க நமது கட்சி முனைப்புடன் செயல்பட்டது. எனினும் ஆளும் வர்க்கங்களின் முதன்மைக் கட்சியாக பா.ஜ.க. மாறிக்கொண்டுள்ளது எனும் முக்கிய அம்சத்தையும் நமது கட்சி கவனத்தில் கொண்டது. இந்த காலகட்டத்தில் காங்கிரஸ், சீத்தாராம் கேசரி தலைமையில் செயல்பட்டது. சோனியா காந்தி அல்லது நேரு குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமையில் இல்லை. காங்கிரசுக்குள் இந்த முரண்பாடும் நீறுபூத்த நெருப்பாக இருந்தது.  11 மாதங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் தேவகவுடா ஆட்சிக்கான ஆதரவை திரும்பப் பெற்றது. காங்கிரசின் இந்த அணுகுமுறைக்கு இடம் அளிக்கக் கூடாது என நமது கட்சி வலுவான நிலையை எடுத்தது. காங்கிரசின் அணுகுமுறை மக்களிடம் கடும் அதிருப்தியை உருவாக்கியது. எனவே பின்வாங்கிய காங்கிரஸ் பிரதமரை மாற்ற வேண்டும் என வற்புறுத்தியது. நமது கட்சி இதனை நிராகரித்தது. எனினும் ஏனைய கட்சிகள் இந்த சமரசத்தை ஏற்றுக்கொண்டதால் தேவகவுடாவுக்கு பதிலாக ஐ.கே.குஜ்ரால் பிரதமர் ஆனார். எனினும் இந்த ஆட்சிக்கும் காங்கிரஸ் தனது ஆதரவை குறுகிய காலத்தில் திரும்பப் பெற்றது. அப்பொழுது முன்வைக்கப்பட்ட ஜெயின் ஆணையம் ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணம் தி.மு.க.தான் என சொல்லியிருப்பதாக குற்றம்சாட்டி தி.மு.க.வை வெளியேற்ற வேண்டும் என  காங்கிரஸ் கூறியது. இதனை இடதுசாரிகளும் ஐக்கிய முன்னணியில் இருந்த அனைத்து கட்சிகளும் நிராகரித்தன. ஏனெனில் அது உண்மை அல்ல. இதனை காரணம் காட்டி காங்கிரஸ் தனது ஆதரவை திரும்பப் பெற்றது. இதன் விளைவாக நடைபெற்ற 1998ஆம் ஆண்டு தேர்தல்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. முதன் முதலாக மத்தியில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைந்தது.

ஐக்கிய முன்னணி அணுகுமுறை

இந்திய அரசியலில் நமது கட்சி தொடர்ந்து இரு அணுகுமுறைகளை கடைப்பிடிக்கிறது. ஒன்று, இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவது. இரண்டு, அந்தந்த சூழலுக்கு ஏற்ப ஆளும் வர்க்கங்களின் அகில இந்திய கட்சிகளுக்கு எதிராக ஒரு பரந்த மேடையை உருவாக்குவது. அவசரநிலை காலத்துக்கு பின்பு ஜனதா கட்சியுடனான அணுகுமுறை/ 1980களின் பிற்பகுதியில் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி/ இப்பொழுது ஐக்கிய முன்னணி என அரசியல் சூழலுக்கு ஏற்ப நமது அணுகுமுறை உருவானது. எனினும் அனைத்து பின்னணியிலும் இடது ஜனநாயக முன்னணி கோட்பாடுக்கும் நமது கட்சியின் சொந்த பலத்துக்கும் தொடர்ந்து தர வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் கட்சி வற்புறுத்தி வந்துள்ளது.  இந்த அணுகுமுறையில் உருவான பலம் - பலவீனங்களை 16ஆவது மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கை விரிவாக ஆய்வு செய்தது. மேலும் ஏனைய முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் தோழர் ஜோதிபாசுவை பிரதமராக முன்மொழிந்ததும் அதனை கட்சியின் மத்தியக் குழு ஏற்கமறுத்த தன் பின்னணியில் ஒன்றிய அரசாங்கத்தில் நமது பங்கேற்பு குறித்து கூர்மையான விவாதமும் இந்த மாநாட்டில் நடந்தது. கட்சி யின் மத்தியக் குழு எடுத்த முடிவு சரியானதே என்பதுதான் மாநாட்டின் இறுதி முடிவாகும்.

பா.ஜ.க.வின் ஆட்சி, ஓர் எச்சரிக்கை

1998இல் மத்தியில் பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் அமைந்ததன் முக்கிய அரசியல் அபாயத்தை இந்த மாநாடு மிக கூர்மையாக சுட்டிக்காட்டியது. பா.ஜ.க. எனும் அரசியல் கட்சி சுயேச்சையாக செயல்படுவது இல்லை என்பதையும் அது ஆர்.எஸ்.எஸ். எனும் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது என்பதையும் தீர்மானம் சுட்டிக்காட்டியது. மேலும் மேலும் இந்திய பெரு முதலாளிகள் பா.ஜ.க. பக்கம் சாய்வதையும் இந்த தீர்மானம் சுட்டிக்காட்டியது. இந்த காலகட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மட்டுமின்றி கிறித்துவ மக்களுக்கு எதிராகவும் கடுமையான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தனக்கு பெரும்பான்மை இல்லாததால் 370ஆவது பிரிவு/ ராமர் கோவில்/ பொது சிவில் சட்டம் ஆகியவற்றை சிறிது பின்னுக்குத் தள்ளியிருப்பது என்பது ஒரு அரசியல் சூழ்ச்சியே எனவும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது இந்த நிகழ்ச்சி நிரலை பா.ஜ.க. நிறைவேற்றும் எனவும் தீர்மானம் எச்சரித்தது. இது தற்பொழுது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக சித்தாந்த/ அரசியல்/ பண்பாட்டு தளங்களில் எதிர்த்து இயங்க வேண்டும் என்பதை 1998 காலத்திலேயே இந்த தீர்மானம் மூலம் கட்சி வலியுறுத்தியது. அதே சமயத்தில் ஜமாயத்-இ-இஸ்லாமி போன்ற சிறுபான்மை அடிப்படைவாத அமைப்புகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானம் சுட்டிக்காட்டியது. நவீன நாசகர பொருளாதாரக் கொள்கை களைப் பொறுத்தவரை பா.ஜ.க.வின் கொள்கைகள் காங்கிரசுடன் இசைந்திருப்பதை சுட்டிக்காட்டும் தீர்மானம் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளும் கூட இந்த பிரச்சனையில் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்பதையும் கூர்மையாகச் சொன்னது. எனவே இந்த பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து வலுவான போராட்டங்களை நடத்த கட்சியும் வர்க்க/ வெகு மக்கள் அமைப்புகளும் கவனம் செலுத்த வேன்டும் எனவும் தீர்மானம் வழிகாட்டியது. மாநில முதலாளித்துவ கட்சிகள் சில பா.ஜ.க. எதிர்ப்பில் உறுதியாக இருப்பதும் சில ஊசலாடுவதுமாக உள்ளன என்பதையும் இந்த தீர்மானம் வெளிப்படுத்தியது. இந்த மாநாட்டில் மகத்தான தலைவர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்/ ஏ. நல்லசிவன்/ கோதாவரி பாருலேகர்/ சுனில் மொய்த்ரா/ சடையன் கோவிந்தன் ஆகிய தோழர்களுக்கும் இம்பிச்சிபாவா/ பி.எஸ். தனுஷ்கோடி/ எம்.செல்லமுத்து ஆகிய தோழர்களுக்கும் பகத்சிங்கின் தோழர் சிவவர்மா ஆகியோரின் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வதேச அளவில் சீனாவின் நவீனத்துக்கு அடித்தளமிட்ட டெங் சியோ பிங் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.