states

img

‘மசோதாக்கள் மீது நீண்ட காலம் அமைதி ஏன்?

புதுதில்லி, பிப். 10 - ‘தமிழக அரசின் மசோதாக்கள் மீது ஆட்சேபனைகள் இருந்தால், நீண்ட  காலம் அமைதியாக இருந்தது ஏன்?’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு மசோதாக் களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதி கள் ஜே.பி. பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜரானார். அப்போது நீதிபதி ஜே.பி. பர்திவாலா, “மாநில அரசு ஒப்புதலுக்காக அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்தியபோது ‘அவரது மனதில் ஏதோ ஒன்று’ இருந்துள்ளது. இருப்பினும், மசோதாக்களில் தனக்கு எரிச்சலூட்டும் விஷயங்கள் குறித்து ஆளுநர் தெரிவிக்கவில்லை. எனவே, அவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்திருக்கிறார். தனது ஒப்புதலை அளிக்க  மறுத்திருக்கிறார். பின்னர் திடீரென்று அவற்றை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக் காக அனுப்பி இருப்பதாக அவர் கூறுகிறார்” என்று தெரிவித்தார். மேலும், “மசோதாக்கள் குறித்து நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? உங்கள் அதிருப்தியை மாநில அரசிடம் ஏன் தெரிவிக்கவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, தீர்ப்பை ஜே.பி. பர்திவாலா அமர்வு ஒத்திவைத்தது.